செய்திகள்
அமராவதி அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் வெளியேற்றப்படுவதை படத்தில் காணலாம்.

நீர்வரத்து அதிகரிப்பால் அமராவதி அணையில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றம்

Published On 2021-08-31 10:36 GMT   |   Update On 2021-08-31 10:36 GMT
கேரளா மாநிலம் மறையூர், கோவில்கடவு, காந்தலூர் ஆகிய ஊர்களில் கடந்த 2 நாள்களாக கன மழை பெய்து வருவதால் அணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிக அளவில் வந்து கொண்டிருந்தது.
உடுமலை:

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் வரையில் 2 மாவட்டங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் 6 முறை அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது.

இதனால் பாசனப் பகுதிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைக்கும் போதெல்லாம் பாசனத்திற்காகவும், குடிநீர் வசதிக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரளா மாநிலம் மறையூர், கோவில்கடவு, காந்தலூர் ஆகிய ஊர்களில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருவதால் அணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிக அளவில் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான தேனாறு, சின்னாறு, பாம்பாறு ஆகிய பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. 

தற்போது அணைக்கு சுமார் 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் 90 அடி உயரமுள்ள அணையில் 88.49 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கேரள மாநிலத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் உள்வரத்தை அப்படியே அமராவதி ஆற்றின் மூலமும், பிரதான கால்வாய் மூலமும் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகவே கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.
Tags:    

Similar News