செய்திகள்
சித்தராமையா

இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: சித்தராமையா

Published On 2020-10-16 01:59 GMT   |   Update On 2020-10-16 01:59 GMT
அதிகாரத்தை பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யும் பா.ஜனதாவுக்கு இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குசுமா நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவருடன் நானும் வந்தேன். எங்களை வலுக்கட்டாயமாக தடுக்க போலீசார் முயற்சி செய்தனர். எங்களின் உதவியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது கர்நாடக அரசின் சர்வாதிகார, ஆணவத்தை காட்டுகிறது. அக்கட்சி காங்கிரசை கண்டு பயந்துபோய் உள்ளது. தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும். போலீசார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தை ஓரங்கட்டிவிட்டு, போலீசார் தன்னிச்சையாக செயல்பட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் பின்னணியில் அரசின் தலையீடு உள்ளது வெளிப்படையாக தெரிகிறது. பா.ஜனதா வேட்பாளர் மனு தாக்கல் செய்தபோது, தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறினர்.

இதை பார்த்தும் போலீசார் கண்களை மூடிக் கொண்டிருந்தனர். இது கண்டிக்கத்தக்கது. இந்த எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத பா.ஜனதா, வரும் நாட்களில் இதேபோல் அதிகாரத்தை பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யும். இதற்கு இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News