செய்திகள்
சிவசேனா

பெலகாவி விவகாரம் குறித்து கர்நாடக கவர்னருடன், பகத்சிங் கோஷ்யாரி பேச சிவசேனா வலியுறுத்தல்

Published On 2020-11-03 01:38 GMT   |   Update On 2020-11-03 01:38 GMT
பெலகாவி வன்முறைகளுக்கு எதிராக மகாராஷ்டிரா கவர்னர், கர்நாடக கவர்னரிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
மும்பை :

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் அதிகளவில் மராட்டியர்கள் வசித்து வருகின்றனர். எனவே எல்லையில் உள்ள அந்த பகுதியை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும் என அங்கு வசிக்கும் மராத்தியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல மராட்டிய அரசும் பெலகாவி பம்பாய் மகாணத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்ததாக உரிமை கோரி வருகிறது.

தற்போது இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கர்நாடக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி சூரியனும், நிலவும் உள்ளவரை பெலகாவி, கர்நாடகத்தின் ஒரு அங்கமாகத் தான் இருக்கும் என கூறினார்.

இதையடுத்து பெலகாவியில் மராட்டியர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கர்நாடக கவர்னரிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் ‘சாம்னா’ பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 60 ஆண்டுகளாக கர்நாடகாவில் வசிக்கும் மராட்டியர்கள், அவர்களின் மொழி, கலாசாரம் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெலகாவி பிரச்சினையை தவிர்த்து இருமாநிலங்களுக்கு இடையேயும் மகிழ்ச்சி நிறைந்த பலமான சமூக, கலாசார, வியாபார உறவு நீடித்து வருகிறது. ஆனால் கர்நாடக அரசு மராத்தி பேசும் 20 லட்சம் மக்களை கடுமையாக நடத்தி வருவது அங்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்த வன்முறைகளுக்கு எதிராக மராட்டிய கவர்னர், கர்நாடக கவர்னரிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டும். அல்லது பெலகாவி பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்திக்க அவர் அனுமதி பெற்று தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News