செய்திகள்
கோப்பு படம் மற்றும் பாஜக கைலாஷ் விஜய்வர்கியா

உணவு பழக்கத்தை வைத்து அவர்கள் வங்காளதேசத்தினர் என்பதை கண்டுபிடித்தேன் - பாஜக பொதுச்செயலாளர் பேச்சு

Published On 2020-01-23 17:35 GMT   |   Update On 2020-01-23 17:35 GMT
தனது வீட்டிற்கு கட்டிட வேலை செய்யவந்த வங்காளதேசத்தினரை அவர்களின் உணவு சாப்பிடும் பழக்கத்தை வைத்து கண்டுபிடித்ததாக பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.
இந்தூர்:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களும், பேரணிகளும் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா பங்கேற்றார். 

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

நான் எனது வீட்டில் புதிதாக ஒரு அறையை கட்ட எண்ணினேன். அதற்கான பணியை தொடங்கிய போது கட்டிடவேலைக்கு வந்திருந்த சில நபர்களின் உணவு பழக்கவழக்கத்தில் எனக்கு சந்தேகம் எழுந்தது. அவர்கள் தட்டையான அரிசியை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டிருந்தனர். 

அவர்களின் உணவு பழக்கம் மற்ற வேலையாட்களை விட வித்தியாசமாக இருந்ததால் அவர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்திருக்கலாம் என எனக்கு சந்தேகம் எழுந்தது. 



ஆகையால், கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் மேற்பார்வையாளரிடமும் அந்த வேலையாட்கள் குறித்து தகவல்களை விசாரித்தேன். அந்த வேலையாட்கள் வங்காளதேசத்தினராக இருக்கலாம் என எனக்கு சந்தேகம் எழுந்த இரண்டாவது நாளிலேயே அவர்கள் திடீரெனெ எனது வீட்டில் கட்டிட வேலை செய்ய வருவதை நிறுத்திவிட்டனர். 

நான் இது குறித்து இன்னும் போலீசில் புகார் அளிக்கவில்லை. மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த தகவலை இங்கு கூறுகிறேன். 
 
நான் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது ஆயுதம் ஏந்திய காவலர்கள் 6 பேர் எனது பாதுகாப்பிற்காக உடன்வருகின்றனர். இந்த நாட்டில் என்ன நடக்கிறது? இந்தியாவுக்குள் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக நுழைந்து பயங்கரவாதத்தை பரப்பவிடலாமா? 

குடியுரிமை திருத்தச்சட்டம் நாடு நலனுக்காக கொண்டுவரப்பட்டது. தவறான தகவல்களின் மூலம் மக்கள் குழப்பம் அடையவேண்டாம். 

இந்த சட்டம் நியாமான அகதிகளுக்கு புகலிடம் அளிக்கும். சட்டவிரோதமாக நுழைந்து உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நபர்களை கண்டறிய உதவும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News