சிறப்புக் கட்டுரைகள்
ப.வண்டார்குழலி ராஜசேகர்

சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு நீரின் தேவையும் நீர்ச்சத்தின் அவசியமும்

Published On 2022-05-06 11:56 GMT   |   Update On 2022-05-06 11:56 GMT
நீரின் தேவையும் வெளியேறும் அளவும் அதிகக் கொழுப்பு இல்லாத அதாவது உடற்பருமன் இல்லாத நிலையில், சராசரி எடையுள்ள ஒருவரின் உடலுக்கான நீரின் சமநிலையை, அவரின் செரிமான மண்டலம், சிறுநீரகம் மற்றும் மூளை ஆகிய மூன்றுமே கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

உடலிலுள்ள ஒவ்வொரு திசுவின் அத்தியாவசியப் பொருளாக இருக்கும் நீர், செல்களின் அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும், ஆதாரமாக, ஊடகமாக இருக்கும் ஒரு சத்து என்றே கூறவேண்டும். செரிமானம், சத்துக்களை உட்கிரகித்தல், கழிவுகளை வெளியேற்றுதல் போன்ற உடலியங்கியல் நிகழ்வுகளுக்குப் பிரதானத் தேவையாக இருக்கும் நீர், உடலின் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கும் மிக முக்கிய வேலையையும் செய்கிறது. எவ்வித நோயும், குறிப்பாக சிறுநீரகக் கோளாறுகள் இல்லாத நிலையில், ஒருவர் எடுத்துக்கொள்ளும் நீரின் அளவும், உடலிலிருந்து வெளியேறும் நீரின் அளவும் ஏறக்குறைய சம அளவாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் உடல் இயக்கம் எவ்விதத்திலும் பாதிப்படையாது. ஆனால், தாங்கவே இயலாத அளவிற்குச் சுட்டெரிக்கும் வெய்யில் காலத்தில் உடலின் நீர்த் தேவையும், உடலிலிருந்து வெளியேறும் நீரின் அளவும் சமன்படுவதில்லை. இதற்குக் காரணம், நீரும் நீர்ச்சத்தும் உடலுக்குக் கிடைக்கும் அளவிற்கு, உணவில் கவனம் செலுத்துவதில்லை.

நீரின் தேவையும் வெளியேறும் அளவும் அதிகக் கொழுப்பு இல்லாத அதாவது உடற்பருமன் இல்லாத நிலையில், சராசரி எடையுள்ள ஒருவரின் உடலுக்கான நீரின் சமநிலையை, அவரின் செரிமான மண்டலம், சிறுநீரகம் மற்றும் மூளை ஆகிய மூன்றுமே கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. ஒருவருக்கு, அவர் குடிக்கும் வெறும் தண்ணீராக 1400 மி.லிட்டரும், உணவின் மூலமாக 700 மி. லிட்டரும், உணவு செரிமானத்தின் மூலம் 200 மி. லிட்டரும், மொத்தம் 2300 மி.லி கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் உடலிலிருந்து வெளியேறும் நீரின் அளவு, சிறுநீராக 1400 மி. லி., மலத்தில் 100 மி.லி., தோல் வழியாக 100 மி.லி., வியர்வையாக 350 மி.லி மற்றும் சுவாச மண்டலம் வழியாக 350 மி.லி., என்று மொத்தம் 2300 மி.லி வெளியேற்றப்பட வேண்டும். இது சாதாரண ஒரு சீதோஷண நிலையில் ஏற்படுவது.

ஆனால், உடலின் வெப்பம் அதிகரிக்கும்போதும், வெய்யில் கடுமையாக இருக்கும் போதும், அதிக உடற்பயிற்சி செய்யும்போதும் இந்த சமநிலையில் மாற்றம் வருகிறது. அதாவது, சிறுநீராக 1200 மி. லி., மலத்தில் 100 மி.லி., தோலின் வழியாக 1400 மி.லி., வியர்வையாக 350 மி.லி, சுவாச மண்டலம் வழியாக 250 மி.லி. என்று மொத்தம் 3300 மி.லி. நீர் உடலிலிருந்து வெளியேறுகிறது. கடுமையான தொடர் உடலுழைப்பு, உடற்பயிற்சி போன்றவை 6600 மி.லி நீர் வெளியேற்றம் வரையில் ஏற்படுத்திவிடும். இதன் காரணமாகத்தான், உடலுக்குக் கொடுக்கும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது.

உடலுக்குத் தேவையான நீரின் அளவைப் பொதுவாகக் கூறும்போது, ஒருநாளைக்கு 8 டம்ளர் நீர் குடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பந்துரிரைப்படி, சராசரி எடையுள்ள நடுத்தர வயது ஆண்களுக்கு 3.7 லிட்டரும், பெண்களுக்கு 2.7 லிட்டரும் நீர் தேவைப்படுகிறது. தேசிய ஆராய்ச்சி நிறுவனமும் உடலியக்கத்திற்குத் தேவையான 1 கிலோ கலோரிக்கு 1 மி.லி நீர்த் தேவை என்று பரிந்துரைப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அளவும், ஒருவர் மேற்கொள்ளும் உடலியக்கத்தின் அளவைப் பொருத்தும், சூழலைப் பொருத்தும் மாறுபடுகிறது.

ஆறு மாதக் குழந்தைக்கு 700 மி.லி, ஒரு வயது குழந்தைக்கு 800 மி.லி, மூன்று வயதுக் குழந்தைக்கு 1.3 லிட்டர், 13 வயதுக்கு 2.4 லிட்டர், 18 வயதுக்கு மேல் 3.3 லிட்டர் (ஆண்), 2.3 லிட்டர் (பெண்) தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் 3.8 லிட்டர் வரையில் தண்ணீர் குடிக்கலாம்.

நீர் என்பது ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இணைந்த திரவம். இயற்கையில் கிடைக்கும் மழை நீர் மற்றும் பிற ஆதாரங்களின் நீரில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், குளோரைடு, சல்பைடு போன்ற தாதுக்கள் சோந்தே இருக்கும். இதுதான் இரண்டு வகை நீருக்கும் உள்ள வேறுபாடு.

மனித உடலில் நீர் என்பது வெறும் நீராக மட்டுமல்லாமல், இரத்தத்தில், பிளாஸ்மாவில், சிறுநீரில், வியர்வையில், மலத்தில், சளியில் ஒரு பாகமாகவே இருக்கிறது. மிக முக்கியமான உள்ளுறுப்புகளுக்கு மெத்தை போன்ற பாதுகாப்பு வளையத்தைக் கொடுக்கிறது. செல்களின் உயிர் ஆதாரமாக இருக்கிறது. அந்த நீரிலும் சோடியம், பொட்டாசியம் போன்ற அயனிகளும் தாதுக்களும், வைட்டமின் பி, சி போன்ற உயிர்ச்சத்துக்களும் சேர்ந்தே இருக்கின்றன. இதனால்தான், உடலின் நீர் இழப்பு என்பது நீர் மட்டுமல்லாமல் அதனுடன் கரைந்து, கலந்து இருக்கும் பிற அயனிகள், தாதுக்கள், உயிர்ச்சத்துக்கள் என்று கூறுகிறோம். உடலில் நீர் பற்றாக்குறையாகும்போது, இவையனைத்துமே சிறிது சிறிதாகக் குறைந்து, செல்களின் செயல்பாடுகள் முடக்கம் அடைகிறது. இதனால், உடலில் இருக்கும் அனைத்துத் திரவங்களும் அடர்த்தியாகி, உறுப்புகள் பாதிப்படைந்து, உடல் சோர்வு நிலைக்கும், தீவிரமாகும்போது மரணம் ஏற்படுவதும் நிகழ்கிறது.

உடலில் நீர்ச்சத்து குறையும்போது ஏற்படும் அறிகுறிகள்

சுருங்கிய கண்கள், நாக்கு வறட்சி, மூக்கு மற்றும் வாய் உலர்ந்து விடுதல், தலைவலி, சோர்வு, மயக்கம், பசி குறைந்துவிடுதல், குழப்பமான மனநிலை, தோலில் நெகிழ்வுத் தன்மை குறைந்து விடுதல், மஞ்சள் நிறத்தில் அடர்த்தியான சிறுநீர், குறைவான அளவில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது சுருக்கென்ற வலி, வயிற்றுவலியுடன் அடிக்கடி மலம் கழித்தல் போன்ற அனைத்தும் உடலில் நீர்ச்சத்து குறைந்து வருகிறது என்பதைத் தொஜீயப்படுத்தும் அறிகுறிகளே. இவற்றுள் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அறிகுறிகள் தொடக்கத்தில் தெரியவரும்போதே, உடலின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். இல்லையெனில், பிற அறிகுறிகள் ஒவ்வொன்றாகச் சேர்ந்து, சுய நினைவை இழந்து முழுவதும் மயங்கிய நிலையை ஏற்படுத்திவிடும்.

அதிகப்படியான நீர் வியர்வையாக வெளியேறுவதாலும், அதைச் சமன்படுத்தும் பொருட்டு நாம் குடிக்க வேண்டிய தண்ணீர் அல்லது நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாததாலும், செரிமான மண்டலத்தில் இருக்கும் நீரின் அளவும் குறையத்துவங்குகிறது. மேலும், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் இருக்கும் பாக்டீரியாக்கள் நொதித்தல் தன்மையை அதிகப்படுத்தி, குடலின் செரித்தல் தன்மையையும் குறைத்துவிடுகிறது. இதனால்தான், அதிக வெய்யிலில் வெளியில் சென்ற வருபவர்களுக்கும் வயிற்றுப்போக்கு போலவே இளகிய மலம் அடிக்கடி வெளியேறுவதுண்டு. இதுவும் மிகுந்த உடல்சோர்வை ஏற்படுத்திவிடும். உடலை அதிக வெப்பத்தில் இருந்து காக்க வேண்டும் என்பதற்காக, சிறுநீரகமும் அதிகப்படியான நீரை மீண்டும் எடுத்துக்கொண்டு, சிறுநீரை அடர்த்தியாக்கிவிடுகிறது. இதனால் தேங்கிவிடும் தாதுஉப்புக்களால், சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன.

நீரையும் நீர்ச்சத்தையும் சமநிலையில் வைத்து இருப்பது எப்படி?

நீர்ச்சத்து என்பதை இரண்டு வகையில் பொருள் கொள்ளலாம். நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கார்போஹைட்டிரேட், புரதம், கொழுப்பு போன்ற பேரூட்டங்களின் வரிசையில், நீரும் ஒரு சத்தாகக் கொள்ளப்படுகிறது என்பது ஒரு வகை. உடலில் உள்ள நீரில் அல்லது நீர்மமான திரவப் பொருட்களில் அயனிகள், தாதுக்கள், உயிர்ச்சத்துக்கள் கலந்தே இருப்பதால், நீர்ச்சத்து என்பது மற்றொரு வகை. இப்போது உடலின் வெப்பத்தை சமநிலையில் வைப்பதற்கும், திரவங்களின் அளவை சமமாக வைப்பதற்கும் தேவைப்படுவது நீர் அல்லது தண்ணீர். ஆனால், அதிக வெய்யில், உடற்பயிற்சி, கடின உழைப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நிலைகளில் உடலுக்குத் தேவைப்படுவது நீரும் அதில் எப்போதும் கலந்தே இருக்கும் பிற சத்துக்களும்தான்.

வெய்யில் காலத்தில் ஏற்படும் சோர்வைப் போக்குவதற்கு நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று ஒருவர் தண்ணீரைக் குடித்தாலும் சோர்வு போகவில்லை என்றால், அவருக்குத் தேவை பிற சத்துக்கள்தான். அப்போதுதான், உடலின் தோல், உள்ளுறுப்புகள், செல்கள், திசுக்கள், பிற திரவங்கள் என்று அனைத்தும் புத்துணர்வு பெறும். நீரழிவு நோயுள்ளவர்கள் பழச்சாறுகள் அல்லது செயற்கை இனிப்புகள் சேர்த்த குளிர்பானங்கள் குடிப்பதையும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மோர், கஞ்சி உள்ளிட்ட உணவுகளில் உப்பு சேர்ப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். வேதிப்பொருட்கள் சேர்த்த ரெடிமேட் குளிர்பானங்கள் உப்பு மற்றும் சர்க்கரையை உடலில் அதிகப்படுத்தி, நச்சுக்களையும் அதிகப்படுத்திவிடும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஒருவருக்கான 3.3 லிட்டர் நீர்த்தேவை என்பது வெறும் நீராக மட்டும் இருக்கக்கூடாது. அது கஞ்சி, சூப், கீர், ஸ்மூத்தி, பருப்பு நீர், ரசம், பால், தயிர், மோர், பழச்சாறு, இளநீர், பதநீர், பழங்கள் மற்றும் பழச்சாறு, நீர் நிறைந்துள்ள புடலை, பீர்க்கன், பரங்கி, சுரைக்காய், கீரைகள் போன்ற உணவுகளை உள்ளடக்கியதே. மேலும், ஒரு நாளைக்கு அந்த நபர் குடிக்கும் குளிர்பானம், காபி, தேநீர் போன்றவற்றையும் உள்ளடக்கும்.

இவற்றுடன் சேர்த்து அவ்வப்போது குடிக்கும் தண்ணீரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறாக நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும்போதுதான் அதில் கரைந்துள்ள தாதுக்கள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் உடலுக்குக் கிடைக்கப்பெறும். இதுபோன்ற உணவுகளை மாற்றி மாற்றிக் கொடுத்து வருவதால், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் உடலின் நீரின் அளவும் பிற சத்துக்களின் அளவும் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.

வெய்யில் காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கை சரிசெய்யும் உடனடி நிவாரணி மோர் தான். நன்மை செய்யும் பாக்டீரியாக்களும், சோடியம், பொட்டாசியம், கால்சியம் நிறைந்த மோர், குடலுக்குத் தேவையான நீரைக் கொடுப்பதுடன், நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகப்படுத்தி, கழிவுகளைத் துரிதமாக வெளியேற்றி, குடலைச் சரிசெய்கிறது. நீர்ச்சத்துள்ள உணவுகளை உண்பதால் அல்லது குடிப்பதால், நீருடன் சேர்த்து அனைத்து சத்துக்களும் உடலுக்குக் கிடைத்து, செரிமான மண்டலம், சிறுநீரகம், தோல் என்று கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகள் தத்தம் பணியைச் சரியாகக் செய்கின்றன. இதனால், அதிக வெய்யில் இருக்கும் காலங்களிலும், எவ்வித உடல் உபாதைகளும் இல்லாமல் உடலைக் காத்துக்கொள்ளலாம்.

தொடர்புக்கு: kuzhaliarticles2021@gmail.com

Tags:    

Similar News