செய்திகள்
புதுவை லெனின் வீதியில் பாய்ந்தோடும் மழைவெள்ளம்.

புதுவையில் கொட்டி தீர்த்த மழை

Published On 2019-11-22 04:57 GMT   |   Update On 2019-11-22 04:57 GMT
புதுவையில் இன்று அதிகாலை முதல் லேசான மழையும், பின்னர் காற்றுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது.
புதுச்சேரி:

புதுவையில் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் தொடங்கும்.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது. ஆனால், இந்த மழை நீடிக்கவில்லை. ஒரு சில தினங்கள் மட்டுமே பெய்த இந்த மழை அதன்பிறகு பெய்யவில்லை.

அதோடு வழக்கமான கோடை காலம் போல கடுமையான வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. இதனால் மீண்டும் மழை பெய்யுமா? என்ற நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் மழை பெய்தது. அதிலும் பகல் நேரங்களில் வெயில் அடிக்க இரவு நேரங்களில் மட்டும் மழை பெய்தது.

இந்த மழையும் ஒருசில தினங்கள் மட்டுமே நீடித்தது. இதையடுத்து கடந்த 2 தினங்களாக மழைக்கான அறிகுறியாக மேகம் சூழ்ந்து காணப்பட்டது. ஆனால், பெருமழை பெய்யவில்லை.

அவ்வப்போது லேசான மழை மட்டும் பெய்தது. நேற்றைய தினம் அதிகாலை முதலே கருமேகங்கள் வானில் சூழ்ந்து காணப்பட்டது. காலை நேரத்தில் சாரல் மழை பெய்தது.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் வானம் கருமேகத்துடன் காணப்பட்டது. இதனால், வெளிச்சம் இல்லாமல் சாலையே இருண்டு கிடந்தது.

இதன்பின்னர் அதிகாலை முதல் லேசான மழை பெய்தது. சுமார் 7.30 மணி அளவில் திடீரென மழை வலுத்தது. காற்றுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது.

கனமழை காரணமாக நகரின் சாலைகள் அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிவாஜி சிலை, இந்திராகாந்தி சிலை, புஸ்சி சாலை பகுதியிலும் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

மழை பெய்த நேரம் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் ‘பீக்அவர்’ நேரமாகும். இதனால் மாணவர்களும், ஊழியர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகனங்களை ஓட்டிசெல்ல முடியவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களோடு பெற்றோர் ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கி நின்றதை காண முடிந்தது.

சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழை காலை 8.30 மணிக்கு மேல் குறைந்தது. இருப்பினும் அவ்வப்போது தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது.
Tags:    

Similar News