லைஃப்ஸ்டைல்
நோன்பு கஞ்சி

நோன்பு கஞ்சியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

Published On 2021-05-13 06:34 GMT   |   Update On 2021-05-13 06:34 GMT
நோன்பிருப்பவர்கள் உடனடியாகப் புத்துணர்ச்சிப் பெறவும் உதவும் ஓர் அற்புதமான உணவே 'நோன்புக் கஞ்சி'. இதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
ரமலான் நோன்பு காலத்தில் காலையில் இருந்து மாலை வரை எந்த உணவும் உண்ணாமல் இருந்து, நோன்பு திறந்த பிறகு திட உணவுகளை உண்பதால், அது உடலுக்குச் சில தொந்தரவுகளைத் தர வாய்ப்பு உள்ளது. அதைத் தவிர்ப்பதற்காகவும், நோன்பிருப்பவர்கள் உடனடியாகப் புத்துணர்ச்சிப் பெறவும் உதவும் ஓர் அற்புதமான உணவே 'நோன்புக் கஞ்சி'. இதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இந்த நோன்புக்கஞ்சியை நோன்பு இருப்பவர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும் குடித்தால், அது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும்.

நோன்பு இருப்பதால், நம் உடலில் உள்ள தேவையற்ற ரசாயனப் பொருள்கள் சுத்தப்படுத்தப்படும். நோன்பு ஆரம்பித்து முதல் இரண்டு நாள்கள் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். மேலும், உடலில் நீர்வறட்சி ஏற்படும். இதைத் தவிர்க்க நோன்பு காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான உணவு நோன்புக்கஞ்சி. இது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 'கஞ்சி' என்று அழைக்கப்படுகிறது.

நோன்புக்கஞ்சியை சாப்பிட்டதும், நம் உடலில் நீர்வறட்சி சரியாகி உடல் சராசரி நிலைக்கு வந்துவிடும். மேலும், நாள் முழுவதும் நோன்பு இருப்பதால், உடல் சூடாகி விடும். நோன்புக் கஞ்சியில் இருக்கும் மசூர் பருப்பானது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தருகிறது.

நோன்புக்கஞ்சி வயிற்றில் உள்ள கழிவுகளைச் சுத்தப்படுத்தும்; அல்சர் தொந்தரவுகளையும் சரி செய்யும். கஞ்சியில் சேர்க்கப்படும் கொத்தமல்லி, புதினா, மஞ்சள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, தக்காளி ஆகியவை நம் வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. எளிதில் செரிமானம் ஆக்கக்கூடிய எளிய வகை உணவு. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது.

மலச்சிக்கலைத் தீர்க்கும். நோன்புக் கஞ்சியானது வயிறு நிறைந்த ஓர் உணர்வைத் தரக்கூடியது. அதற்கும் மேலாக உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துகளையும் தரக்கூடியது. நோன்பு இருப்பவர்கள் மட்டுமின்றி அனைவரும் இதை உட்கொள்ளலாம். இது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
Tags:    

Similar News