செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

புதிய வேளாண் சட்டங்கள் விவகாரம்: விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை இனி நடக்குமா?

Published On 2021-01-23 05:05 GMT   |   Update On 2021-01-23 05:05 GMT
புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் இரு தரப்பிலும் பிடிவாதம் நீடிப்பதால் இனி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்குமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப் மாநில விவசாயிகள் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் விதித்த 4 நிபந்தனைகளில் மத்திய அரசு 2 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் மத்திய அரசு ஏற்க திட்டவட்டமாக மறுத்து விட்டது.

ஆனால் விவசாயிகள் வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்து உள்ளனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை உருவாக்கியது. ஆனால் அந்த குழுவை விவசாயிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

மத்திய அரசுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறி இதுவரை 11 தடவை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். நேற்று நடந்த பேச்சுவார்த்தை வெறும் 18 நிமிடங்களில் முடிந்து விட்டது. இரு தரப்பிலும் எந்த ஒரு சிறு கோரிக்கையும் விட்டுக்கொடுக்கப்படவில்லை.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே தீர்வு ஏற்படாமலேயே இழுபறி நீடிக்கிறது. மத்திய அரசு தரப்பில், “புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற இயலாது. வேண்டுமானால் 18 மாதங்கள் நிறுத்தி வைக்கிறோம்” என்று உறுதியுடன் தெரிவிக்கப்பட்டது.

போராட்டம் நடத்தும் 21 விவசாய சங்கங்களில் பாதி அமைப்புகள் மத்திய அரசின் இந்த கோரிக்கையை ஏற்றனர். ஆனால் பாதி அமைப்புகள் ஏற்காததால் டெல்லியில் போராட்டம் நீடிக்கிறது.

மத்திய அரசு தரப்பில் இனி எந்த பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தாலும் கோர்ட்டு மூலம் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. விவசாயிகள் தங்களது முடிவை இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக கூறி உள்ளனர். தீர்வு காணும் வரை டெல்லியை விட்டு நகரப்போவதில்லை என்றும் எச்சரித்துள்ளனர். இதனால் விவசாயிகள் போராட்டம் வரும் நாட்களில் மேலும் தீவிரமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தரப்பிலும் பிடிவாதம் நீடிப்பதால் இனி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்குமா என்பதிலும் கேள்விக்குறி எழுந்துள்ளது. இதற்கிடையே விவசாய அமைப்புகளிடம் பிளவை உண்டாக்க மத்திய அரசு சதி செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஆனால் விவசாய அமைப்புகளை வெளியில் உள்ள சிலர் தூண்டி வருவதாக மத்திய அரசு கூறி உள்ளது. இதனால் அடுத்த கட்டமாக இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News