செய்திகள்
சசிகலா

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் சசிகலாவை வரவேற்க அமமுக தொண்டர்கள் குவிந்தனர்

Published On 2021-02-08 07:11 GMT   |   Update On 2021-02-08 07:11 GMT
சசிகலாவை வரவேற்க ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் பிற மாவட்டங்களை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
வேலூர்:

பெங்களூரில் இருந்து இன்று காலை சசிகலா சென்னைக்கு புறப்பட்டார். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக அவர் சென்னை செல்கிறார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் திரும்பும் அவரை வழிநெடுகிலும் உற்சாகமாக வரவேற்க அ.ம.மு.க.வினர் திரண்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட எல்லை தொடக்கம் மற்றும் முடியும் இடங்களிலும் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட எல்லையான வெலக்கல்நத்தத்தில் அ.ம.மு.க.வினர் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க குவிந்துள்ளனர். வாணியம்பாடி, ஆம்பூரிலும் ஏராளமானோர் திரண்டுள்ளனர். ஆம்பூரில் சசிகலாவை வரவேற்க வைக்கப்பட்டிருந்த மேடை மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

வேலூர் மாவட்ட எல்லையான கூத்தம்பாக்கம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி, வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சசிகலாவை வரவேற்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஆட்டம், பாட்டத்துடன் அந்த பகுதி விழாக்கோலம் பூண்டு களைக்கட்டியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பூட்டுத்தாக்கு, ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரி, வாலாஜா சுங்கச்சாவடி, காவேரிப்பாக்கம், ஓச்சேரி, பெரும்புலிம்பாக்கத்தில் சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

செண்டை மேளம், டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, பொய்க்கால் குதிரை, புலியாட்டம், இசை நிகழ்ச்சிகள் என 8 வகையான கலை நிகழ்ச்சிகளுடன் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் பிற மாவட்டங்களை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

இதனையொட்டி வழிநெடுகிலும் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News