செய்திகள்
மதுபானம்

மது குடித்தால் ஒரு இரவு கூண்டுச்சிறை

Published On 2021-10-21 00:35 GMT   |   Update On 2021-10-21 01:43 GMT
மோதிபுராவை சேர்ந்த நாட் சமூக தலைவர் பாபு நாயக் கூறும்போது, “இந்த திட்டத்தால் குடித்து விட்டு வந்து ரகளையில் ஈடுபடுவது, வீடுகளில் சண்டை போடுவது 90 சதவீதம் குறைந்து விட்டது.
ஆமதாபாத்:

மகாத்மா காந்தியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனாலும் மது குடிக்கும் வழக்கத்தை அந்த மாநில மக்கள் கூண்டோடு விட்டு விடவில்லை.

அவர்கள் கள்ளச்சாராயம் போன்ற மதுவகைகளை குடிக்கத்தான் செய்கிறார்கள். குடிகாரர்கள், மதுவின் கோரத்தால் மரணம் அடைவது அதிகரித்து வருகிறது. பல ஊர்களில் ஊருக்கு 100 முதல் 150 பெண்கள் வரையில், மதுவுக்கு கணவரை இழந்து விதவைகளாகி உள்ளனர்.

அப்படி ஒரு ஊர்தான், மோதிபுரா. அங்கு குடிகாரர்களுக்கு அதிரடியாக ஒரு தண்டனை விதிக்கிறார்கள். அதாவது, யாரேனும் குடிபோதையில் இருப்பது கண்டறியப்பட்டால், அங்கு இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இரும்புக்கூண்டில் விலங்குகளைப்போல ஒரு இரவு முழுவதும் அடைத்து சிறை வைத்து விடுவார்கள்.

ரூ.1,200 அபராதம் செலுத்தினால்தான் அவர்கள் கூண்டுச்சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். பின்னர் இந்த அபராதம் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

‘நாட்’ சமூகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், அந்த ஊரில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதைப்பார்த்து, ஆமதாபாத், சுரேந்திரநகர், அம்ரேலி, குட்ச் மாவட்டங்களில் உள்ள மேலும் 23 கிராமங்களிலும் குடிகாரர்களுக்கு இந்த கூண்டுச்சிறை திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

இந்த அபராத தொகையை என்ன செய்கிறார்கள் என்கிறீர்களா?

இந்த தொகையைக் கொண்டு சமூக தொண்டுகள் செய்கிறார்கள். கோவில் திருவிழாக்கள் நடத்துகிறார்கள்.

இந்த திட்டம் பற்றி மோதிபுராவை சேர்ந்த நாட் சமூக தலைவர் பாபு நாயக் கூறும்போது, “இந்த திட்டத்தால் குடித்து விட்டு வந்து ரகளையில் ஈடுபடுவது, வீடுகளில் சண்டை போடுவது 90 சதவீதம் குறைந்து விட்டது. குடிகாரர்களை போலீஸ் வசம் ஒப்படைக்கமாட்டோம். எங்களுடையது சமூக நடவடிக்கை ஆகும்” என குறிப்பிட்டார்.

Tags:    

Similar News