செய்திகள்
பதவி நீக்கப்பட்ட பிரதமர் அப்தல்லா ஹம்டோக்

சூடானில் அமைதி திரும்ப வாய்ப்பு- நீக்கப்பட்ட பிரதமரை மீண்டும் பதவியில் அமர்த்த ராணுவம் ஒப்புதல்

Published On 2021-11-21 12:39 GMT   |   Update On 2021-11-21 12:39 GMT
ஐ.நா., அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் வரைவு ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாக அதிகாரிகள் கூறினர்.
கெய்ரோ:

சூடான் நாட்டில் பொதுமக்கள்-ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சியை ராணுவம் கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றியது. அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். 

ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சூடானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பதற்றம் நீடிக்கிறது.

சூடானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே பதவியில் இருந்த பிரதமர் அப்தல்லா ஹம்டோக்கிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் ஆட்சிக் கவிழ்ப்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் அப்தல்லா ஹம்டோக்கை மீண்டும் பதவியில் அமர்த்த, ராணுவத்திற்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இத்தகவலை ராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும்  தெரிவித்தனர். 

இருப்பினும், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று ஒரு தரப்பு அறிக்கை வெளியிட்டது. ஹம்டோக் ஒரு சுதந்திரமான அமைச்சரவையை வழிநடத்துவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஐ.நா. அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் வரைவு ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாக அவர்கள் கூறினர். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னர் ஒப்பந்தத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் சில அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே விரைவில் இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News