ஆன்மிகம்
பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவில் தேரோட்டம்

Published On 2019-09-17 04:58 GMT   |   Update On 2019-09-17 04:58 GMT
பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை இழுத்து வழிபட்டனர்.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான அகோபில வரதராஜப் பெருமாள் கோவில் பாலசமுத்திரத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை 7 மணிக்கு சப்பரத்தில் சீதேவி-பூதேவியுடன் வரதராஜப்பெருமாள் உலா வரும் நிகழ்ச்சியும், இரவில் அனுமார், பவளக்கால், கருடன், சேஷம் உள்ளிட்ட வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

திருவிழாவின் 7-வது நாளான கடந்த 14-ந்தேதி அகோபில வரதராஜபெருமாள், சீதேவி-பூதேவிக்கு திருக் கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு வரதராஜப்பெருமாள், சீதேவி-பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 6.30 மணிக்கு தேரேற்றம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

அதையடுத்து காலை 9 மணிக்கு துலா லக்னத்தில் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியுடன் தேரோட்டம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா...என கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர். தேரானது பாலசமுத்திரத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியே வலம் வந்தது. பின்னர் 11 மணிக்கு தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News