விளையாட்டு
4 கேப்டன்கள்

2 டெஸ்டில் 4 கேப்டன்கள் - மும்பை டெஸ்டில் புதிய சாதனை

Published On 2021-12-03 23:21 GMT   |   Update On 2021-12-03 23:21 GMT
132 ஆண்டுகளுக்குப் பின் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்தி சாதனை படைத்துள்ளனர்.
மும்பை:

இரு டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்துவது கிரிக்கெட்டில் மிகவும் அரிதான சம்பவமாகும். இதற்கு முன் 1889-ம் ஆண்டு இரு டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் செயல்பட்டிருந்தனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு இங்கிலாந்து அணி பயணம் செய்தபோது தென் ஆப்பிரிக்க அணிக்கு ஓவன் டன்னல், வில்லியம் மில்டன் என இரு போட்டிகளுக்கு இரு கேப்டன்கள் இருந்தனர். அதேபோல, இங்கிலாந்து அணிக்கு ஆப்ரே ஸ்மித், மான்டி பவுடன் என இரு கேப்டன்கள் செயல்பட்டனர்.

இந்நிலையில், 132 ஆண்டுகளுக்கு பிறகு 2 டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் செயல்பட்டு அணியை வழிநடத்தி சாதனை படைத்துள்ளனர்.

இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி கேப்டனாக ரகானே பொறுப்பேற்றார். மும்பையில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு  கேப்டன் விராட் கோலி வந்துவிட்டதால், ரகானே அமரவைக்கப்பட்டார். 

அதேபோல், நியூசிலாந்து அணியில் கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு வில்லியம்சன் கேப்டன் பொறுப்பேற்றார். வில்லியம்சனுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதால், மும்பை டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதில் கேப்டன் பொறுப்பை டாம் லாதம் கவனிக்கிறார்.

Tags:    

Similar News