செய்திகள்
கேரளாவில் நாளை ஒரே கட்டமாக தேர்தல்

கேரளாவில் நாளை ஒரே கட்டமாக தேர்தல்- 140 தொகுதிகளிலும் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

Published On 2021-04-05 07:36 GMT   |   Update On 2021-04-05 07:36 GMT
கேரளாவில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவ படையினரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 400 துணை ராணுவ படையினர், 2400 போலீஸ் அதிகாரிகள், 1600 சிறப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரள சட்டசபைக்கும் நாளை தேர்தல் நடக்கிறது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தற்போதைய அரசின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அங்கும் நாளை 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

கேரள மாநிலத்தில் நீண்ட கடற்கரையும், ஏராளமான மலை கிராமங்களும் உள்ளன. மாநிலம் முழுவதும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் வேண்டுகோள் விடுத்தால் தேர்தல் கமி‌ஷன் நாளை ஒரே கட்ட தேர்தலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

கேரளாவின் 140 தொகுதிகளிலும் மொத்தம் 2.75 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 140 தொகுதிகளில் 14 தொகுதிகள் தனித்தொகுதிகள் ஆகும். இதில் 2 தொகுதிகள் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.



தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 40771 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த தேர்தலை விட தற்போது 25, 041 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் பணியில் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். இங்கும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் செய்துள்ளது.

வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் பொருள்கள் அனைத்தும் நேற்றே மூட்டையாக கட்டப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இன்று அவை வாக்குச்சாவடி பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அதனை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்றனர்.

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவ படையினரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 400 துணை ராணுவ படையினர், 2400 போலீஸ் அதிகாரிகள், 1600 சிறப்பு அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவர்களை தவிர மலையோர கிராமங்களுக்கும், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் நகர் பகுதியில் 300 வாக்குச்சாவடிகள் உள்ளன. 200 வாக்குசாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. இதில் 80 வாக்குசாவடிகளில் கூடுதல் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.

இதில் 53 வாக்குசாவடிகள் மாவோயிஸ்டு நடமாட்டம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்த வாக்குசாவடிகளுக்கு அதிரடி படையும், துணை ராணுவ படையினரும் அனுப்பப்பட்டு உள்ளனர். இங்கு வாக்குப்பதிவை மாலை 6 மணியுடன் முடித்து கொள்ள தேர்தல் கமி‌ஷன் அறிவுறுத்தி உள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவரும் இன்று மாலையே புறப்பட்டு செல்கிறார்கள். நாளை இரவு 7 மணிக்கு மேல் வாக்குப்பதிவு முடிந்து அவற்றை வாக்கு எண்ணும் மையங்களில் ஒப்படைத்த பின்னரே ஊழியர்கள் வீடு திரும்ப முடியும். இதன்மூலம் அவர்கள் சுமார் 35 மணி நேரம் பணியில் இருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே அவர்களுக்கு வாக்குப்பதிவுக்கு இடையே உணவு இடைவேளை விட வேண்டும் என்று ஊழியர்கள் தேர்தல் கமி‌ஷனுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக்கொள்ளவில்லை.
Tags:    

Similar News