செய்திகள்
கோப்புபடம்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2021-04-12 02:33 GMT   |   Update On 2021-04-12 02:33 GMT
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14, 15-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அதிகரிக்க தொடங்கியது. ஒவ்வொரு நாளும் வெயிலின் கோரத்தாண்டவத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை பிற்பகல் நேரங்களில் தவிர்த்து வந்தனர். அதிலும் கடந்த மாதம் இறுதியில் இயல்பை விட வெப்பத்தின் அளவு அதிகமாக பதிவானது.

வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே சாரல் மழை முதல் லேசான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரையிலான 4 நாட்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை (செவ்வாய்க்கிழமை) தென் தமிழகம் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14-ந்தேதி (நாளை மறுதினம்), 15-ந்தேதி (வியாழக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், நீலகிரி, தேனி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறினார்.



நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘பெரியகுளம், பழனியில் தலா 5 செ.மீ., பூதப்பாண்டி 4 செ.மீ., கயத்தாறு, நாகர்கோவில், சாத்தான்குளம், மதுரை விமான நிலையம் தலா 3 செ.மீ., பெருஞ்சாணி, புத்தன் அணை, கன்னிமார், சுருளக்கோடு, வலிநோக்கம், பாம்பன், ஆர்.எஸ்.மங்கலம் தலா 2 செ.மீ., முதுகுளத்தூர், சிவலோகம், குழித்துறை தலா 1 செ.மீ.' மழை பெய்துள்ளது.
Tags:    

Similar News