உள்ளூர் செய்திகள்
ஸ்ரீ பொன்னம்பலம் சுவாமிகள்

சென்னை சித்தர்கள்: ஸ்ரீ பொன்னம்பலம் சுவாமிகள்- செம்பாக்கம்

Published On 2021-12-25 08:29 GMT   |   Update On 2022-01-04 11:11 GMT
பொன்னம்பலம் சுவாமிகள் தன் தந்தையிடமே சைவ சமய தீட்சையை பெற்றார். அவரை பல்வேறு இடங்களுக்கும் சிற்றம்பலம் முதலியார் அழைத்துச் சென்றார்.
யார் என்னிடம் பக்தி கொண்டு என் சமாதியில் சரண் அடைந்தாலும் அவர்களை நான் காப்பாற்ற தவறுவதில்லை என்கிறார் ஸ்ரீ பொன்னம்பலம் சுவாமிகள். இந்த சித்தரின் ஜீவ சமாதி வடதிருவாணைகா என்று அழைக்கப்படும் செம்பாக்கத்தில் அமைந்துள்ளது.

திருப்போரூர்-செங்கல்பட்டு இடையே செம்பாக்கம் கிராமம் இருக்கிறது. முந்திரி காடுகளுக்கு மத்தியில் ரம்மியமான மலை சூழ்ந்த பகுதியில் இந்த கிராமம் இருப்பதால் ஒருவித அமைதி காணப்படுகிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் சிற்றம்பலம் முதலியார்-சொக்கம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஸ்ரீ பொன்னம்பலம் சுவாமிகள்.

இவரது பிறப்பே அதிசயம் நிறைந்த அவதாரமாக நிகழ்ந்தது. சிற்றம்பலம் முதலியார்-சொக்கம்மாள் தம்பதிக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. ஒருநாள் இவர்கள் இருவரும் செம்பாக்கத்தில் உள்ள அழகாம்பிகை உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்து கொண்டு இருந்தனர். அப்போது பாதயாத்திரையாக அந்த பகுதிக்கு வந்த ஒரு சன்னியாசி அங்கு ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

அவரை பார்த்த சிற்றம்பலம் முதலியாருக்கு அவருக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. சன்னியாசியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று உணவு கொடுக்க முயன்றார். அப்போது அந்த சன்னியாசி எனக்குரியதை நானே சமைத்து சாப்பிடுவதுதான் வழக்கம் என்றார். உடனே சிற்றம்பலம் முதலியார் தனது மனைவியிடம் சொல்லி அரிசி, பாத்திரம் எல்லாவற் றையும் வாங்கி வந்தார்.

அதை சன்னியாசியிடம் கொடுத்து சமைத்து சாப்பிடும் படி கேட்டுக் கொண்டார். அதன்படி சன்னி யாசியும் சமைத்து சாப்பிட்டார். பிறகு சிற்றம்பலம் முதலி யார்- சொக்கம்மாள் தம்பதியை அழைத்து தான் சாப்பிட்டது போக மீதம் இருந்த உணவை கொடுத்து இதை சாப்பிடு என்று கொடுத்தார். சொக்கம்மாளை பார்த்து, “நீ சொக்கத் தங்கம் உனக்கு பொன்னம்பலம் தருகிறேன் பெற்றுக்கொள்” என்று ஆசீர்வதித்தார்.

இந்த நிகழ்ச்சி நடந்த சில மாதங்களில் சொக்கம்மாள் கர்ப்பம் தரித்து அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். குழந்தைக்கு சன்னியாசி குறிப்பிட்டதை போல பொன்னம்பலம் என்று பெயர் சூட்டினார்கள். சிற்றம்பலம் முதலியார் குடும்பத்தினர் சிதம்பரம் நடராஜரை குலதெய்வமாக வழிபடுபவர்கள்.

எனவே குழந்தையாக இருந்த பொன்னம் பலத்தை அழைத்துக் கொண்டு இருவரும் சிதம்பரம் சென்றனர். அப்போது கோவிலில் ஒருவர் திருசிற்றம்பலம் என்று அழைத்தார். சிற்றம்பலம் முதலியார் திரும்பி பார்த்தபோது, அந்த சன்னியாசி நின்று கொண்டு இருந்தார். அவர் சிரித்துக் கொண்டே, “என்ன பொன்னம்பலம் கிடைத்ததா?” என்று கேட்டு குழந்தையை வாங்கி ஆசீர்வதித்தார். அந்த குழந்தை சித்தபுருஷ்ராக உயர்ந்து உலகத்துக்கு உபகாரம் செய்வான் என்று கூறினார்.

அந்த சன்னியாசி ஆசீர்வதித்தபடி பொன்னம்பலம் வளர வளர பக்தியும், அருளும் சேர்ந்தே வளர்ந்தது. இறைவன் மூலம் அவருக்கு அனைத்தும் கைகூடியது. சரியை, கிரியை, யோகங்கள் அனைத்தும் கிடைத்தது. அதை அவர் வெளிப்படுத்த தொடங்கினார். ஒருதடவை தனது தந்தையை பார்த்து, “என்னைப் பற்றி கவலை வேண்டாம்” என்று கூறினார். அப்போதுதான் பொன்னம்பலம் “திரிகால ஞானி” என்பதை சிற்றம்பலம் முதலியார் புரிந்துக் கொண்டார்.

பொன்னம்பலம் சுவாமிகள் தன் தந்தையிடமே சைவ சமய தீட்சையை பெற்றார். அவரை பல்வேறு இடங்களுக்கும் சிற்றம்பலம் முதலியார் அழைத்துச் சென்றார். அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்த முத்தையா சுவாமிகளிடமும் அழைத்து வந்தார். அங்கு பொன்னம்பலம் சுவாமிகளுக்கு ஆத்ம ஞானம் மேலும் அதிகரித்தது. மகன் தொடர்ந்து தீவிர சித்தர்கள் வழிபாட்டில் செல்வதை கண்ட சொக்கம்மாள் பயந்து போய் தனது மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை பட்டார்.

முதலில் பொன்னம்பலம் சுவாமிகள் திருமணம் செய்ய மறுத்தார். ஆனால் முத்தையா சுவாமி களின் அறிவுரையை ஏற்று இல்லறத்தில் ஈடுபட சம்மதித்தார். இல்லறத்தில் இருந்து துறவு கொள்வதே சிறந்தது என்பதை சுந்தரர் வாழ்க்கையை உதாரணமாக சொல்லி தெளிவுப் படுத்தினார். இதனால் சைதாப்பேட்டையைச் சேர்ந்த அமிர்தம்மாளை பொன்னம்பலம் சுவாமிகள் திருமணம் செய்தார். அவர்களுக்கு சிவலிங்கம் என்ற மகன் பிறந்தார்.

அதன் பிறகு பொன்னம்பலம் சுவாமிகள் இல்லறத்தில் இருந்து துறவு வாழ்க்கைக்கு மாறி மட்டற்ற நிலைக்கு சென்றார். தந்தையின் மறைவுக்கு பிறகு அவரை நினைத்து தினமும் பூஜை செய்து வணங்கி வந்தார். தொடர் தியானம் காரணமாக பொன்னம்பலம் சுவாமிகளுக்கு சித்தர்களுக்குரிய அனைத்து அற்புதங்களும் நிறைவாக ஏற்பட்டது.

என்றாலும் பொன்னம்பலம் சுவாமிகள் நெசவு செய்து பொருள் ஈட்டி எளிமையாக வாழ்ந்து வந்தார். ஒருதடவை வீடு கட்ட தொடங்கி விட்டு பணம் கிடைக்காமல் தவித்தார். அப்போது அவரது மாமனார் பணம் கொடுத்து உதவினார். ஆனால் அந்த பணத்தை சுவாமிகளால் திருப்பி கொடுக்க இயலவில்லை. இதனால் அவரது மாமனார், “250 ரூபாய் தரவேண்டியது உள்ளது. அதை தராமல் தவம் தவம் என்று இருந்தால் என்ன அர்த்தம். சும்மா தவம் இருந்தால் சாமி என்ன வடை, பாயாசத்தோடு சோறு போடுமா?” என்று கேட்டார்.

இதை கேட்டதும் பொன்னம்பலம் சுவாமிகள் அறைக்குள் சென்று தவம் செய்தார். பிறகு தனது மாமனாரையும் உறவினர்களையும் அழைத்து உள்ளே போய் பாருங்கள். வடை, பாயாசத்தோடு எல்லாம் இருக்கும் என்றார். எல்லோரும் அந்த அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு மிகப்பெரிய தலைவாழை இலையில் வடை, பாயாசத்துடன் உணவு இருந்தது. இதை கண்டதும் பயமும், ஆச்சரியமும் அடைந்தனர். அதன் பிறகே அவர் மிகப்பெரிய சித்தர் என்பதை உணர்ந்து கொண்டனர். அதன் பிறகு அவரை யாரும் சோதிப்பது இல்லை.

ஒருதடவை சில இளைஞர்கள் பொன் னம்பலம் சுவாமிகளை சோதிப்பதற்காக ஒருவனை செத்தவன் போல் நடிக்க சொன்னார்கள். அவனை சுவாமிகளிடம் கொண்டு சென்று இவன் செத்து விட்டான். அவனை உயிர் பிழைக்க வையுங்கள் என்று பாசாங்கு செய்தனர். உடனே சுவாமிகள் இவன் செத்து விட்டான். இனி உயிரோடு வரமாட் டான் என்றார். அந்த இளைஞர்கள் சிரித்து கொண்டே செத்தவன் போல் நடித்தவனை தட்டி எழுப்பினார்கள்.

ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. உண்மையிலேயே செத்து போய் இருந்தான். இதை கண்டதும் அந்த இளைஞர்கள் கதறினார்கள். சுவாமிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். அதன் பிறகு சுவாமிகள் திருநீறை அள்ளி தூவி பிழைத்துப் போ என்றார். அதன் பிறகு அந்த இளைஞன் உயிரோடு எழுந்தான். இப்படி பொன்னம்பலம் சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் கணக்கில் அடங்காதவை.

எந்த குறையாக இருந்தாலும் அவர் திருநீறு மட்டுமே கொடுப்பார். நோயாளிகளுக்கு திருநீறு பூசிவிடுவார். அவரிடம் போனால் எந்த குறையும் நீங்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்தது. திருநீறு மூலம் அவர் தினம் தினம் அற்புதங்கள் செய்தார். இதனால் பொன்னம்பலம் சுவாமிகளுக்கு “விபூதி வள்ளல்” என்ற மற்றொரு பெயரும் இருந்தது.

ஒரு தடவை தண்ணீரில் விளக்கு எரித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். ஆனால் பெரும்பாலும் தன்னிடம் வரும் ஒவ்வொரு பக்தருக்கும் சிவ வழிபாட்டையும், ஆன்மீக சிந்தனையை யும் புகுத்தினார். எப்படி வாழ வேண்டும். எப்படி தர்ம சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்பதையெல்லாம் சொல்லி கொடுத்தார்.

பொன்னம்பலம் சுவாமிகள் எதிலும் யாரிடமும் வேற்றுமைகள் பார்ப்பதில்லை. மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, தாவரமாக இருந்தாலும் சரி அவருக்கு எல்லாம் ஒன்றுதான். ஒரே மாதிரி நடந்துக் கொள்வார். தன்னிடம் வரும் பக்தர்களுக்கு என்ன உணவு கொடுக் கிறாரோ அதை அவரும் சாப்பிட்டார்.

வாராகி பக்தனை முருக பக்தனாக மாற்றியது, உளுந்தூர்பேட்டை முத்துசாமி செட்டியாருக்கு அருள் செய்தது போன்று பலரை திருத்தி உள்ளார். தன்னிடம் சீடராக இருந்த திருமேனிக்கு கார்த்திகை மாதம் திருவண்ணாமலை செல்லாமலேயே இருந்த இடத்தில் இருந்தே திருவண்ணாமலை தீபத்தை காட்டி அருள் பாலித்தார். ஒரே நேரத்தில் பல இடங்களில் நடமாடியும், கூடு விட்டு கூடு தாவுதல் என்ற “பரகாய பிரவேசம்” செய்வதிலும் இவர் மேன்மை பெற்று இருந்தார்.

இப்படி ஏராளமான அற்புதங்கள் நிகழ்த்திய ஸ்ரீபொன்னம்பலம் சுவாமிகள் 1834-ம் ஆண்டு மாசி மாதம் உத்திராடம் நட்சத்திரம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். அவர் ஐக்கியமாவதற்கு முன்பு, “புளிய மரத்தில் புளி உலுக்கினால் சிவகதியாகிய பழம் விழும்” என்ற முத்தையா சுவாமிகளின் அசரீரியை உணர்ந்து தன் இறுதிநாளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அவர் தவம் செய்து வந்த இடத்திலேயே அவருக்கு சமாதி கிரியை செய்யப்பட்டது.

அவருக்கு பிறகு 1914-ம் ஆண்டு பிறந்த அவரது பேரன் ஸ்ரீ இளைய பொன்னம்பலம் சுவாமிகள் தனது தாத்தாவை போன்றே சித்த புரு‌ஷராக மாறி அற்புதங்கள் நிகழ்த்தினார். 1976-ம் ஆண்டு மார்கழி மாதம் பூராடம் நட்சத்திர தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். அவர் பெரிய பொன்னம்பலம் சுவாமிகளுக்கு எதிரே நந்தி உள்ள இடத்தின் கீழ் ஜீவசமாதி வைக்கப்பட்டார்.

வருகிற 3-ந்தேதி அவருக்கு மகாகுரு பூஜை நடைபெற உள்ளது. அதுபோல பிப்ரவரி 27-ந்தேதி பெரிய பொன்னம்பலம் சுவாமிகளின் 187-வது குரு பூஜை நடைபெற உள்ளது. அன்று திருவாசகம் பாராயணமும், மகாஅபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெறும்.

ஒரு சித்தரின் ஜீவபீடம் என்றாலே அங்கு அருளாற்றல் நிரம்பி இருக்கும். இங்கு 5 சித்தர்களின் ஜீவபீடம் உள்ளது. இந்த தலத்தில் காலடி எடுத்து வைத்தாலே கர்மவினைகளின் வீரியம் குறைந்து விடும். இந்த ஜீவ சமாதியை சித்தர்களின் வழிதோன்றல்கள் பொன்னம்பலம் (9840224400), விவேகானந்தன் (90944 98845) ஆகியோர் பராமரித்து வருகிறார்கள்.

இந்த ஜீவ சமாதி ஆலயத்தில் தியான அறை என்று தனியாக உள்ளது. அங்கு பெரிய பொன்னம்பலம் சுவாமிகளின் பாத ரட்சைகள் உள்ளன. இவரது பெயரில் விபூதி வாங்கி சென்றாலே நினைத்தது நடக்கிறது.

சிறப்பு மிக்க இந்த ஜீவ சமாதி ஆலயத்துக்கு திருப்போரூர்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் செம்பாக்கம் வந்ததும் கிராமத்துக்குள் சென்றால் வலது பக்கத்தில் இருப்பதை காணலாம். சென்னையில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், மகாபலிபுரத்தில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த ஜீவ சமாதி ஆலயம் உள்ளது.
Tags:    

Similar News