செய்திகள்
கோப்புப்படம்

திருமணத்துக்கு குதிரையில் ஊர்வலமாக வந்த மணமகனுக்கு அடி-உதை

Published On 2019-12-04 05:13 GMT   |   Update On 2019-12-04 05:13 GMT
மத்தியபிரதேச மாநிலத்தில் திருமணத்துக்கு குதிரையில் ஊர்வலமாக வந்த மணமகனை தாக்கிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
போபால்:

மத்தியபிரதேச மாநிலம் அகர்மால்வா மாவட்டத்தில் உள்ள பத்வாடா கிராமத்தை சேர்ந்தவர் தர்மேந்திர பர்மர்.

எம்.காம். மற்றும் பி.எட். படித்துள்ள இவர் அங்குள்ள கூட்டுறவு வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றுகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்தது. கடந்த சனிக்கிழமை இரவு திருமண ஊர்வலம் புறப்பட்டது.

அப்போது மணமகன் தர்மேந்திர பர்மரை அவரது உறவினர்கள் குதிரையில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த சிலர் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் மணமகனை குதிரையில் ஊர்வலமாக அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து மணமகன் வீட்டாரிடம் தகராறு செய்தனர். திடீரென தர்மேந்திர பர்மரை தாக்கிய கும்பல் அவரை குதிரையில் இருந்து கீழே தள்ளி உதைத்துள்ளனர்.

இதை தடுக்க முயன்ற அவரது தந்தையையும் தாக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது போலீசார் மற்றும் மணமகன் வீட்டார் மீது கற்களை வீசிய கும்பல், போலீசாரின் துப்பாக்கிகளையும் பறிக்க முயன்றனர்.

இதைத் தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து திருமண ஊர்வலம் செல்வதற்கு பாதுகாப்பு அளித்தனர்.

இது போன்ற ஊர்வலங்கள் ஒன்றும் புதியது அல்ல என்பதை நாங்கள் விளக்கினோம். ஆனாலும் கும்பல் அதை கேட்கவில்லை. ஊர்வலம் எங்களது வீடுகளுக்கு முன்பாக செல்லக் கூடாது என்று மிரட்டினர். அவர்கள் என்னை மோட்டார் சைக்கிளில் அல்லது டிராக்டரில் செல்லுமாறு கூறினர். நாங்கள் எல்லா முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு அவர்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். நாங்கள் படித்தவர்கள். நாங்கள் ஏன் யாரையும் கலந்தாலோசிக்க வேண்டும்?

நாங்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் கிராமத்தில் இருந்து எங்களை வெளியேற்றுவதாக மிரட்டுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News