வழிபாடு
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2022-01-11 04:59 GMT   |   Update On 2022-01-11 04:59 GMT
பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் முடிகாணிக்கை செலுத்தியும், கரும்பு தொட்டிலில் குழந்தைகளை சுமந்து கோவிலை வலம் வந்து அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில்கள் சாத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாத்தப்பட்டது. கோவில் நடை சாத்தப்பட்டாலும் அம்மனுக்கு உரிய பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் பக்தர்கள் இன்றி தைத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தநிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று காலை மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டதால் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காலையிலிருந்தே கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சமயபுரம் வந்து குவிந்தனர்.

அவர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றியும், நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை வழிபட்டு சென்றனர். சில பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் முடிகாணிக்கை செலுத்தியும், கரும்பு தொட்டிலில் குழந்தைகளை சுமந்து கோவிலை வலம் வந்து அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

இதேபோல், சமயபுரம் போஜீஸ்வரர் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசாமி கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில், குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் நேற்று காலை நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்று சாமியை வணங்கினர்.
Tags:    

Similar News