வழிபாடு
நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றதையும், அதனை காண வந்த பக்தர்கள் கூட்டத்தையும் படத்தில் காணலாம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி

Published On 2021-12-21 04:09 GMT   |   Update On 2021-12-21 04:09 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. அப்போது உற்சவர் நம்பெருமாளை அர்ச்சகர்கள் கைகளில் ஏந்தி, எதிரில் நிற்கும் பக்தர்களுக்கும், பராங்குச நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி காத்திருக்கும் நம்மாழ்வாருக்கும் நன்கு தெரியும்படி காட்டுவார்கள். அர்ச்சகர்களின் கைகளில் இருந்து நம்பெருமாள் சேவை சாதிப்பதால், இந்த நிகழ்ச்சிக்கு திருக்கைத்தல சேவை என்று பெயர்.

திருக்கைத்தல சேவையையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணிவரை திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடைபெற்றது. மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொது ஜனசேவையும் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பரமபத வாசல் திறப்பு கிடையாது. வேடுபறி நிகழ்ச்சியையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளுகிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார். அங்கு இரவு 8.15 மணிமுதல் இரவு 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவையும் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

10-ம் திருநாளான 23-ந்தேதி தீர்த்தவாரியும், 24- ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவிஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News