செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், அரிவாள்கள், மோட்டார் சைக்கிள்களை காணலாம்

தஞ்சை அருகே டாக்டர்களை தாக்கி வழிப்பறி- 5 பேர் கைது

Published On 2020-11-09 03:42 GMT   |   Update On 2020-11-09 03:42 GMT
தஞ்சை அருகே டாக்டர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளப்பெரம்பூர்:

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்களாக பணி புரிந்து வருபவர்கள் மணிமாறன்-சுதா தம்பதியினர். இவர்கள் கடந்த ஜூன் மாதம் தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டை ரெயில்வே பாலம் அருகே காரை நிறுத்தி விட்டு அங்கு உள்ள வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த 4 பேர் டாக்டர் மணிமாறனை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு அவரிடம் இருந்து 5 பவுன் சங்கிலி, ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தையும், அவருடைய மனைவி சுதாவிடம் இருந்து 5 பவுன் சங்கிலியையும் பறித்து விட்டு தப்பி சென்றனர்.

இதேபோல் கடந்த ஆகஸ்டு மாதம் தஞ்சை மானோஜி பட்டியை சேர்ந்த கால்நடை டாக்டர் சரண்யாவிடம் இருந்து 11 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வண்ணாரப் பேட்டை ரெயில்வே பாலம் அருகே உள்ள வாய்க்கால் பாலம் பகுதியில் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ரெயில்வே பாலம் அருகே அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மறைந்திருந்த நபர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் தஞ்சை அருகே உள்ள மானோஜிப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது39), பிரபாகரன் (30), ராஜ்குமார் (56), கணேசன் (68), மற்றொரு கணேசன் (45) ஆகிய 5 பேர் என்பதும், பல்வேறு இடங்களில் நடந்த நகை, பணம் வழிப்பறி சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகள் மற்றும் ஒரு செல்போன், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.

கடந்த ஜூன் மாதம் மானோஜிப்பட்டியை சேர்ந்த மணி என்பவரை போலீசார் விரட்டி சென்றபோது அவர் போலீசாருக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

வழிப்பறி சம்பவங்களில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News