செய்திகள்
கோப்புப்படம்

அரியானாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

Published On 2021-04-26 19:06 GMT   |   Update On 2021-04-26 19:06 GMT
அரியானா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 4 பேர் இறந்த 24 மணி நேரத்துக்குள் மேலும் 5 நோயாளிகள் அதே பிரச்சினையால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சண்டிகர்:

அரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 4 கொரோனா நோயாளிகள் நேற்று முன்தினம் இறந்தனர். அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் ஹிசார் நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மேலும் 5 கொரோனா நோயாளிகள் நேற்று இறந்தனர். அவர்களில் மூவர் ஹிசார் மாவட்டத்தையும், ஒருவர் டெல்லியையும், மற்றொருவர் பஞ்சாபையும் சேர்ந்தவர்கள்.



ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் அவர்கள் இறந்ததாகக் கூறி அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக முறைப்படி புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி விசாரித்து வருகிறார், அவரது அறிக்கையின் அடிப்படையில் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், அரியானா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு ஆளும் பா.ஜ.க.-ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணிதான் காரணம் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
Tags:    

Similar News