ஆன்மிகம்
சபரிமலை

ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தம்

Published On 2020-12-09 07:50 GMT   |   Update On 2020-12-09 07:50 GMT
சாமி தரிசனம் செய்யலாம் என்ற நம்பிக்கையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு அதிகளவில் வருகின்றனர். ஆனால் அவர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகின்றனர்
திருவனந்தபுரம் :

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. 16-ந்தேதி முதல் பக்தர் கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

வார நாட்களில் 2 ஆயிரம் பேரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 3 ஆயிரம் பக்தர்களும், சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக ஆன்லைனில் முன் பதிவு செய்யாத பக்தர்களும் ஏராளமானோர் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

முன்பதிவு செய்த பக்தர்களுடனும், மேலும் தனியாகவும் வருகிறார்கள். முன்பதிவு செய்யாவிட்டாலும் எப்படியாவது சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் வருகிறார்கள். ஆனால் நிலக்கல்லில் பக்தர்களின் முன்பதிவு ஆவணங்கள் போலீசாரால் சரிபார்க்கபடுகின்றன.

அப்போது முன்பதிவு டிக்கெட் இல்லாமல் வரக் கூடிய பக்தர்களை சபரிமலைக்கு செல்ல போலீசார் அனுமதிப்பது இல்லை. முன்பதிவு செய்யாதவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இதனால் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.

கடந்த சில நாட்களாக இதுபோன்ற காட்சிகள் அடிக்கடி அரங்கேறுகின்றன. ஆகவே முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று தேவசம் போர்டு தலைவர் வாசு கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News