ஆன்மிகம்
திருவண்ணாமலை கோவில்

திருவண்ணாமலையில் தீப திருவிழா நடத்துவது குறித்து இன்று இறுதி முடிவு

Published On 2020-11-12 04:40 GMT   |   Update On 2020-11-12 04:40 GMT
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா நடத்துவது குறித்து அதிகாரிகளின் கூட்டத்தில் மேற்கொண்ட ஆலோசனையின்படி இன்று (வியாழக்கிழமை) இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசுக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சக்திவேல் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதில், பூரி ஜெகந்நாதர் கோவிலில் நடத்திய திருவிழா போல, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலிலும் திருவிழாக்களை நடத்தவேண்டும் என்றும், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கடந்த 7-ந் தேதி கோரிக்கை மனு அனுப்பியதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “திருவிழா நடத்தினால், வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவதை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த முடியும். ஆனால், உள்ளூர் மக்களை எப்படி கட்டுப்படுத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசு தரப்பில், “கோவில் விழாக்கள் நடத்துவது குறித்து அக்டோபர் 30-ந் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கோவில் நடைமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த திருவிழாவை எப்படி நடத்த வேண்டும் என்று கோவில் நிர்வாகம்தான் முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

“வழக்கமாக 17 நாட்கள் திருவிழா நடக்கும். இதில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள், தேர் திருவிழாவின்போது 5 லட்சம் பக்தர்கள், மகா கார்த்திகை தீபம் அன்று 20 முதல் 25 லட்சம் பக்தர்கள் வரை திருவண்ணாமலை கோவிலுக்கு வருவார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூஜைகள் அனைத்தும் முறையாக நடத்தப்படும். தேர்த் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்காமல், உற்சவரை வைத்து கோவிலுக்குள் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், தீபத்திருவிழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து கோவில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று (நேற்று) நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் நாளை (இன்று) இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கோவில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது குறித்து அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அன்று தெரிவிக்கும்படி அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News