உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா

Published On 2021-12-08 23:45 GMT   |   Update On 2021-12-08 23:45 GMT
அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்படி மாணவர்கள் வகுப்புகளில் கலந்துகொண்டு பாடங்களை கற்று வருகின்றனர். தடுப்பு நடவடிக்கைகளை மீறியும் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 6-ந்தேதி அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியான நிலையில், விடுதியில் அவரோடு தங்கியிருந்த மற்ற மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடம் உடனடியாக பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மேலும் 8 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த 9 மாணவர்களும் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

நோய் பாதிப்பு உறுதியான உடனேயே மாணவர்கள் தங்கியிருந்த விடுதி அறைகள் அனைத்தும் கிருமிநாசினி கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.



மேலும் விடுதிகளில் தங்கி இருக்கும் பிற மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாமல், 14 நாட்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். இதுதவிர விடுதிக்கு வெளியில் இருந்து வரும் மாணவர்கள் ‘கொரோனா பாதிப்பு இல்லை' என்ற சான்றிதழ் கொண்டு வருவதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகுதான் நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் மாநகராட்சி, பல்கலைக்கழகத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருக்கும் 9 மாணவர்களுக்கும் ‘ஒமைக்ரான்' பாதிப்பு இல்லை என்றும், அவர்கள் தற்போது நலமுடன் இருக்கிறார்கள் என்றும், பாதிக்கப்பட்ட அந்த 9 மாணவர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News