செய்திகள்
அமைச்சர் மா சுப்பிரமணியன்

வருகிற சனிக்கிழமை 7-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2021-10-26 09:57 GMT   |   Update On 2021-10-26 13:33 GMT
11 மருத்துவ கல்லூரிகளிலும் முழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று டெல்லியில் மத்திய சுகாதார மந்திரியிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டையில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சிறப்பாக செலுத்தப்பட்டு வருகிறது. எல்லா வகையான தடுப்பூசிகளும் கையிருப்பில் உள்ளன.

9.42 லட்சம் குழந்தைகள், 10.43 லட்சம் பெண்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியுள்ளது. குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு போடப்பட வேண்டிய தடுப்பூசிகளை சரிவர செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போது 44 லட்சம்
கொரோனா தடுப்பூசிகள்
கையிருப்பில் உள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்கிறார். வருகிற சனிக்கிழமை 50 ஆயிரம் மையங்களில் 7-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 2 லட்சத்துக்கு குறைந்தவர்கள் 2-வது தவணை கோவேக்சின் தடுப்பூசி போட வேண்டி உள்ளது.



7 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர் சேர்க்கை குறித்து கோரிக்கை இருந்து வருகிறது.

11 மருத்துவ கல்லூரிகளிலும் முழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று நாளை டெல்லியில் மத்திய சுகாதார மந்திரியிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.

19 இடங்களில் மாவட்ட அரசு மருத்துவமனைகள் அமைக்க வேண்டியுள்ளது. அதற்கு ரூ.950 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் முதல் அலையின்போது பயன்படுத்திய கொரோனா மருத்துவ உபகரணங்களை பத்திரப்படுத்தாமல், தயார் நிலையில் வைக்காமல் கிடப்பில் போட்டு வைத்ததால் தான் 2-வது அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது.

3-வது அலை என்று ஒன்று வந்தால் அதை சமாளிக்க அந்த உபகரணங்கள் தேவைப்படும், பண்டிகைகளை கொண்டாடுவதற்கு தடையில்லை. முககவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, மருத்துவ மற்றும் ஊரக பணிகள் துறை இயக்குனர் குருநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.



Tags:    

Similar News