செய்திகள்
திருட்டு

நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளி கட்டிகள் சேலத்தில் விற்பனை- 2 பேரிடம் விசாரணை

Published On 2020-12-03 09:42 GMT   |   Update On 2020-12-03 09:42 GMT
நெல்லை நகைக்கடையில் வெள்ளி, தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (32) மற்றொரு சுரேஷ் (30) இவர்கள் 2 பேரும் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டனர்.

இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மேடை போலீஸ் ஸ்டேசன் அருகே உள்ள கிருத்திகா ஜூவல்லர்ஸ் நகை கடையின் பூட்டை உடைத்து வெள்ளி, தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.

இது தொடர்பாக 2 பேரையும் போலீசார் தேடிய நிலையில் கோவையில் நடந்த கொள்ளையில் போலீசில் சிக்கி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை நெல்லை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது வெள்ளி ஆபரணங்களை உருக்கி கட்டிகளாக மாற்றி சேலம் பனங்காட்டில் உள்ள 10 வெள்ளி கடைகளில் விற்றதாக தெரிவித்தனர். இதனால் 2 பேரையும் நெல்லை போலீசார் நேற்று முன்தினம் சேலத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அவர்கள் தெரிவித்த கடைகளில் போலீசார் வெள்ளியை தருமாறு கேட்டபோது வியாபாரிகள் தர மறுத்து வாக்குவாதம் செய்தனர். கொண்டலாம்பட்டி போலீசார் வியாபாரிகளை சமாதானப்படுத்தி 2 கிலோ வெள்ளியை பெற்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து கொள்ளையர்கள் வெள்ளி கட்டிகளை விற்றதாக கூறப்படும் செவ்வாய்ப்பேட்டை, அம்மாப்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதனால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News