செய்திகள்
கொள்ளை

திருத்துறைப்பூண்டி அருகே முன்னாள் ஜமாத் தலைவர் வீட்டில் 29 பவுன் நகைகள்-ரூ.6 லட்சம் கொள்ளை

Published On 2020-11-21 03:55 GMT   |   Update On 2020-11-21 03:55 GMT
திருத்துறைப்பூண்டி அருகே முன்னாள் ஜமாத் தலைவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 29 பவுன் நகைகள், ரூ.6 லட்சத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு மேலத்தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜலீல் (வயது 60). கட்டிமேடு ஜமாத்தின் முன்னாள் தலைவரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அங்கு சிகிச்சை பெற்று வருவதால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரோடு துணைக்கு இருந்து வருகின்றனர்.

இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று வீட்டிற்குள் இருந்த பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 29 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இந்த நிலையில் அப்துல் ஜலீல் உறவினர்கள் அவர் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த அப்துல் ஜலீல் வீட்டிற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கொள்ளை போன நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News