செய்திகள்
கொடைக்கானல் பைன் மரக்காடு பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

வார விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த கொடைக்கானல்

Published On 2020-11-22 05:48 GMT   |   Update On 2020-11-22 05:48 GMT
வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் அங்குள்ள சுற்றுலா இடங்கள் நிரம்பி வழிந்தது.
கொடைக்கானல்:

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வாகனங்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். அதிலும் கடந்த வாரம் தீபாவளி பண்டிகை விடுமுறையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக் கானலுக்கு வருகை தந்தனர்.

ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்களில் அவர்கள் வந்ததால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிப்பதால், அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் தங்களது கேமரா, செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக பில்லர் ராக், பைன் மரக் காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் குவிந்தனர்.

இதற்கிடையே ஏரிச்சாலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் தொடர் வருகையால் கொடைக்கானல் நகரில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News