செய்திகள்
எம்.எல்.ஏ. அப்ஹே சிங் சௌதலா

26-ம் தேதிக்குள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவில்லையென்றால்... ராஜினாமா கடிதம் அனுப்பிய எம்.எல்.ஏ.

Published On 2021-01-11 10:21 GMT   |   Update On 2021-01-11 10:21 GMT
ஜனவரி 26-ம் தேதிக்குள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறவில்லை என்றால் இந்த கடிதத்தை தனது ராஜினாமா கடிதமாக ஏற்றுக்கொள்ளும்படி அரியானா சபாநாயகருக்கு அம்மாநில எம்.எல்.ஏ. ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
சண்டிகர்:

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 47-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 8 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

ஆனால், 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என விவசாய அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன.

அதேவேளை சட்டத்தில் திருத்தம் வேண்டுமானால் கொண்டுவரலாம் ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வாய்ப்பே இல்லை என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இதனால், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி டெல்லி ராஜபாதையில் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு நடைபெற்றது. அப்போது, வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க அரசு முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும். டெல்லிக்குள் விவசாயிகளை நுழைய விடுவது பற்றி கோர்ட் முடிவு எடுக்காது அது போலீசின் முடிவு என்றும் கூறியது.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் பாஜகவுக்கு தெரிவித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளன.

அந்த வகையில், அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரியானா மாநிலத்தில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. அப்ஹே சிங் சௌதலா. இவர் அரியானா சட்டசபை சபாநாயகருக்கும் இன்று கடித்தம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ’ஜனவரி 26-ம் தேதிக்குள் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவில்லை என்றால் இந்த கடிதத்தை எனது ராஜினாமா கடிதமாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.வின் ராஜினாமா கடிதத்தால் அரியானா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.    
Tags:    

Similar News