செய்திகள்
திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்களை காணலாம்

கொரோனா ஊரடங்கு எதிரொலி- சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள்

Published On 2021-04-21 06:43 GMT   |   Update On 2021-04-21 08:20 GMT
கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டதன் எதிரொலியாக வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது.
திருப்பூர்:

தொழில் நகரமான திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்தவர்கள் 5 லட்சம் பேரும், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் 3 லட்சம் பேரும் இருக்கிறார்கள்.

இதுதவிர காங்கேயம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பண்ணை மற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் என மாவட்டம் முழுவதும் பல்வேறு தொழில்களில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் வடமாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் திருப்பூருக்கு வந்து தங்களது நிறுவனங்களுக்கு செல்கிறார்கள்.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கிடையே கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதன் பின்னர் சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அப்போது பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் வடமாநில தொழிலாளர்கள் பலரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு வந்து ரெயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதி வந்து கொண்டிருக்கிறது. வடமாநிலத்தினரும் உற்சாகமாக சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
Tags:    

Similar News