செய்திகள்
ராகுல் காந்தி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அரசியல் செய்ய வாய்ப்பை உருவாக்காதீர்கள்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

Published On 2019-09-17 17:44 GMT   |   Update On 2019-09-17 17:44 GMT
காஷ்மீரில் தேசியதலைவர்கள் அனைவரையும் மத்திய அரசு வீட்டுச்சிறையில் அடைத்திருப்பதால் அங்கு பயங்கரவாதிகள் அரசியல் செய்ய வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட பல அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஃபரூக் அப்துல்லா மீது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் போடப்பட்டு வீட்டுச்சிறையில் உள்ளார். 

இந்நிலையில், காஷ்மீரில் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியாவது:

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஃபரூக் அப்துல்லா போன்ற அரசியல் தலைவர்களை அரசியலில் இருந்து முழுவதும் நீக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு அரசியல் வெற்றிடம் உருவாகி வருகிறது. அந்த அரசியல் வெற்றிடத்தை பயங்கரவாதிகள் நிரப்ப அதிக வாய்ப்புகள் உள்ளது. 



ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் காஷ்மீர் நாட்டின் பிறபகுதிகளில் அரசியல் செய்ய நிரந்தரமான ஒரு கருவியாகிவிடும். ஆகையால், மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசியல் வெற்றிடத்தில் பயங்கரவாதிகள் நுழையாமல் தடுத்து வீட்டுக்காவலில் உள்ள தேசிய கட்சிகளின் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News