உலகம்
போல்சனோரா, மைக் ரியான்

மக்களை கொல்லும் வைரஸ் வரவேற்கப்படாது: பிரேசில் அதிபரின் கருத்துக்கு ‘WHO’ பதில்

Published On 2022-01-13 06:43 GMT   |   Update On 2022-01-13 06:43 GMT
உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வரவேற்கத்தக்க வைரஸ் என பிரேசில் அதிபர் போல்சனோரா கருத்து தெரிவித்த நிலையில் உலக சுகாதார அமைப்பு பதில் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. 2020-ம் ஆண்டு முதல் அலையில் இருந்து ஒருவழியாக மீண்டு வந்த உலக நாடுகள், டெல்டா என்ற உருமாற்றம் அடைந்த வைரஸால் மீண்டும் அவதிக்குள்ளானது. குறிப்பாக இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை டெல்டா வைரஸ் தொற்று உருவாக்கியது. எப்போது இந்த கொடிய வைரஸ் தொற்று ஒழியும் என்ற ஓசை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

அதன்பின் உலக நாடுகள் சகஜ நிலைக்கு வந்தது. இனிமேல் கொரோனா வைரஸ் தொற்று அப்படியே செயல் இழந்து மறைந்து விடும் என நினைக்கையில் தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் மின்னல் வேகத்தில் பரவும் தன்மையுடையதாக இருக்கிறது. இதன் காரணமாக உலகளவில் ஒவ்வொரு நாடுகளிலும் லட்சக்கணக்கானோர் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன.

ஆனால், ஆறுதல் தரும் விசயமாக இது உயிர்ப்பலியை அதிக அளவில் ஏற்படுத்தவில்லை என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதனால், ஒமைக்ரான் வைரஸ் தொற்றுடன் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

எப்போதுமே, கொரோனா வைரஸ் தொற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பிரேசில் அதிபர் போல்சனோரா ‘‘உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் வரவேற்கலாம். இது கொரோனா பெருந்தொற்றை முடிவுக்குக் கூடு கொண்டு வரலாம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உலக சுகாதார மையத்தின் எமர்ஜென்சி இயக்குனர் மைக் ரியான், ‘‘ஒமைக்கரான் வைரஸ் தொற்று தனிப்பட்ட நபருக்கு குறைவான வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் லேசான நோய் என்பது அர்த்தம் அல்ல. உலகளவில் ஏரளமான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அவசரப்பரிவில் மூச்சுத் திணறால் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது தடுப்பூசியால் தடுக்கப்பட வேண்டிய நோய். வலுவான தனிப்பட்ட முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பூசி செலுத்துவது நோயை தடுப்பதற்கான வழி.

நம்மால் செய்யக்கூடியது எவ்வளவோ இருக்கிறது. இது வைரஸ் தொற்றை வரவேற்பதற்கான நேரம் அல்ல. மக்களை கொல்லும் வைரஸ் வரவேற்கப்படாது. தடுப்பூசியின் சரியான பயன்பாட்டின் மூலம் அதை தடுக்க முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News