செய்திகள்
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் - தொழிலாளர்கள் வலியுறுத்தல்

Published On 2021-09-27 11:48 GMT   |   Update On 2021-09-27 11:48 GMT
மக்களையும், மின்வாரிய தொழிலாளர்களையும் பாதிக்கும் மின்சார சட்ட திருத்த மசோதா 2021யை மத்திய அரசு கைவிட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பல்லடம்:

பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேஷன் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட சங்கத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.

மாநில செயலாளர் சதீஷ் சங்கர், பொருளாளர் பாஸ்டின் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் சங்க செயலாளர் கந்தசாமி வரவேற்றார்.  கூட்டத்தில் மாநிலத்தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர் சேக்கிழார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

மக்களையும், மின்வாரிய தொழிலாளர்களையும் பாதிக்கும், மின்சார சட்ட திருத்த மசோதா 2021யை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும் மின் துறையை பொது துறையாக பாதுகாக்க வேண்டும்.

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்க கூடாது. மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்தும் அந்த சட்டத்தை திரும்ப பெற  தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டும். 

2018-ம் ஆண்டு ஒப்பந்த கூலி அடிப்படையில் மின் வாரியத்தில் தினக்கூலி ஊதியமான ரூ.380 என்கிற நிர்ணய அடிப்படையில் தனியாரிடம் பணிகளை ஒப்படைக்காமல் மின்சார வாரியமே நேரடியாக அதே கூலி அடிப்படையில் ஒப்பந்த பணி ஆட்களை நியமனம் செய்தால் அவர்களுக்கு மின்சார வாரியம் வழங்கும் தினக்கூலி முழுமையாக சென்றடையும். 

தமிழக அரசு விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் 1 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகளை வழங்க உத்தரவிட்டுள்ளது வரவேற்கதக்கது ஆகும். இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த களப்பணியாற்ற வேண்டிய தொழிலாளர்கள் பணியிடங்கள் சுமார் 9 ஆயிரம் காலியாக இருப்பதால் திட்டத்தை விரைவாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்த பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டும். 

தமிழகத்தில் 2800 உதவி மின் பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. அதில் 1000 அலுவலகங்களில் தூய்மை பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அங்கு தூய்மை பணியாளர்களை நியமனம் செய்திட வேண்டும். தமிழகத்தில் 10 ஆயிரம் கேங்க்மேன் பணியிடங்களில் 5ஆயிரம் பணியிடங்கள் கடந்த ஆட்சியில் பணி நியமனம் செய்யப்பட்டது.

மீதமுள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நியமனம் செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார வாரிய அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்களை கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவித்து அதற்கான சலுகைகளை செயல்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தில் நிர்வாகிகள் அன்புராஜ் (பல்லடம்), மோகன், ஆறுச்சாமி (உடுமலை), சக்திவேல், துரைராஜ் ( காற்றாலை உடுமலை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News