வழிபாடு
விருத்தகிரீஸ்வரர் கோவில்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2022-02-08 03:37 GMT   |   Update On 2022-02-08 03:37 GMT
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஐந்து கோபுரங்கள், ஐந்து பிரகாரங்கள், ஐந்து தீர்த்தங்கள், ஐந்து நந்திகள், ஐந்து கொடிமரங்கள் என அனைத்தும் ஐந்தால் ஆன சிறப்புடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அப்போது சிறப்பு பூஜைகள் செய்து, ஐந்து கொடி மரங்களிலும் கொடி ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவின்போது தினந்தோறும் காலை, மாலை சாமிக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் மற்றும் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அதில் முக்கிய விழாக்களில் 6-ம் நாள் விழாவான விருத்தகிரீஸ்வரர் விபத்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக விழா 13-ந் தேதியும், 9-ம் நாள் விழாவாக வருகிற 16-ந் தேதி தேரோட்டமும், 17-ந் தேதி சிகர நிகழ்ச்சியான மாசிமக தீர்த்தவாரி திருவிழாவும் நடக்கிறது. 18-ந் தேதி தெப்ப திருவிழாவும், 19-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், 20-ந் தேதி விடையாற்றி உற்சவம் ஆரம்ப நிகழ்ச்சியும், (அடுத்த மாதம்) மார்ச் 1-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News