ஆன்மிகம்
நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவையொட்டி வாணவேடிக்கை நடைபெற்றதையும், திரளானோர் கண்டுகளித்ததையும் காணலாம்.

நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடக்கிறது

Published On 2021-01-23 04:03 GMT   |   Update On 2021-01-23 04:03 GMT
நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. இந்த சந்தனம் கூடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தர்காவை வந்தடையும்.
நாகையை அடுத்த நாகூரில் உலக பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல்ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளையொட்டி கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 464-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் இரவு வாணவேடிக்கை நடைபெற்றது.

நேற்று இரவு 10 மணிக்கு தர்காவில் பீர் அமர வைத்தல்(பீர் ஜமாத்தார்) நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. சந்தனக்கூடு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படுகிறது. அப்போது சாம்பிராணி சட்டி ரதம், நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தன கூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்து செல்லும். சந்தனக்கூடு ஊர்வலம் நாகை புதுப்பள்ளி தெரு வழியாக யாஹசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, சர்அகமதுதெரு உள்ளிட்ட தெருக்களில் பவனியாக செல்லும்.

பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை சந்தனக்கூடு சென்றடையும். தொடர்ந்து அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதி பின்னர் வாணக்காரத்தெரு, தெற்கு தெரு, அலங்காரவாசல் வழியாக வந்து அங்குள்ள பாரம்பரிய முறைக்காரர் வீட்டில் சந்தனக்குடத்தை வாங்கி கூட்டில் வைக்கப்படும். பின்னர் செய்யது பள்ளி தெரு வழியாக சந்தனம் கூடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தர்காவை வந்தடையும். இதையடுத்து கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, அதிகாலை 4.30 மணியளவில் சந்தனகுடங்கள் தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்படும். இதைத்தொடர்ந்து, ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசப்படும். விழாவையொட்டி நாகூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சந்தனக்கூடு ஊர்வலத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தலைமையில் 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
Tags:    

Similar News