செய்திகள்
அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

12,959 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகை- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2021-09-11 06:18 GMT   |   Update On 2021-09-11 07:07 GMT
யாரும் செய்யாத, யாரும் கேள்விப்படாத 120 அறிவிப்புகளை சேகர்பாபு சட்டமன்றத்தில் அறிவித்தார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசினார்.
சென்னை:

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், ஒரு கால பூஜை திட்டம் 12,959 கோவில்களில் செயல்பாட்டில் உள்ளது.

இந்த கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்.

முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
கலந்து கொண்டு ஒரு கால பூஜை செய்யும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில் கோவில் நிலங்கள் மீட்கப்படுகின்றன. நிலங்கள் மட்டுமல்ல சொத்துக்களும் மீட்கப்படுகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழில் வழிபாடு செய்யக்கூடிய அற்புதம் இந்த துறையின் மூலமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இறைவனை போற்றக்கூடிய பாடல் புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது. அர்ச்சகர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிதி தரப்பட்டு இருக்கிறது. 15 வகையான பொருட்கள் தரப்பட்டிருக்கிறது.

இன்னொரு அற்புதத்தையும் நான் சொல்லியாக வேண்டும். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒவ்வொரு துறையினுடைய மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதில் விவாதம் நடந்து அதெல்லாம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு துறையின் சார்பில் ஒவ்வொரு அமைச்சர்களும் என்ன செய்யப் போகிறோம் என்பதை ஒரு புத்தகமாக வைத்துக் கொண்டு அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அறநிலையத்துறையின் சார்பில் சேகர்பாபு மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்து பேசி அதன் பிறகு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதுவரை யாரும் செய்யாத, யாரும் கேள்விப்படாத 120 அறிவிப்புகளை சேகர்பாபு  சட்டமன்றத்தில் அறிவித்தார். அது ஒரு பெரிய சாதனை. ஏராளமான கோவில் திருப்பணிகள் நடக்க இருக்கிறது.  புதிய தேர்கள் வலம் வரப்போகின்றன.


அதுமட்டுமல்ல இதுவரை இல்லாத வகையில் இந்து அறநிலையத்துறையின் சார்பில் கல்லூரிகள் தொடங்கப்பட இருக்கிறது. அதுதான் மிக மிக முக்கியமான ஒன்று. அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்களுக்கெல்லாம் குடியிருப்புகள் கட்டித்தரப்பட இருக்கிறது.

இவைகள் அனைத்தும் செய்யப்பட்டு முடிந்து விட்டால் அறநிலையத்துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகப்போகும் காட்சிகளை நாம் எல்லாம் பார்க்கப் போகிறோம்.

அந்த வரிசையில் இன்று ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் இருக்கக்கூடிய 12,959 கோவில்களை சார்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கக் கூடிய திட்டத்தை நான் தொடங்கி வைக்கிறேன். இதனால் ஆண்டுக்கு 13 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதலாக செலவாகும். மன்னிக்கணும் இதை செலவு என்று நான் சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News