இந்தியா
புயல் மையம் கொண்டுள்ள பகுதி

கரையை கடக்கும் முன் வலுவிழக்க வாய்ப்பு... ஒடிசாவில் 130 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பரில் தாக்கும் புயல்

Published On 2021-12-04 13:56 GMT   |   Update On 2021-12-04 13:56 GMT
ஜாவத் புயல் ஒடிசாவில் கரையை கடந்த பிறகு 6-ந்தேதி மேற்கு வங்கம் நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
புவனேஸ்வர்:

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஜாவத் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சவுதிஅரேபியா வழங்கிய அந்த பெயருக்கு கருணை என்று அர்த்தமாகும்.

ஜாவத் புயல் இன்று (சனிக்கிழமை) வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்தது. அது மேலும் வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நெருங்கி உள்ளது.



இதன் காரணமாக தமிழ்நாடு, ஆந்திர, ஒடிசா கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆந்திராவில் 3 மாவட்டங்களில் மிக கடுமையான மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஜாவத் புயல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளை தாக்கும். ஒடிசா மாநிலம் பூரி அருகே இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் புயல் கரையை நெருங்கும்முன்பு வலுவிழந்து விடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் அறிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது ஒடிசா கடலோரத்தை தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



கரையை கடந்த பிறகு ஜாவத் புயல் மேலும் வலுவிழக்கும். அதன் பிறகு அது மேற்குவங்காளம் நோக்கி நகரும். இதன் காரணமாக ஆந்திராவில் 3 மாவட்டங்கள், ஒடிசா கடலோர பகுதிகளில் தேசிய பேரிடர் குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். 64 பேரிடர் மீட்பு குழு ஆங்காங்கே தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே புயல்- மழையால் அதிக பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படும் இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜாவத் புயல் ஒடிசாவில் கரையை கடந்த பிறகு 6-ந்தேதி (திங்கட்கிழமை) மேற்கு வங்கம் நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதனால் மேற்கு வங்காளத்தின் கடலோர பகுதிகளில் நாளை முதல் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நகரிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஒடிசாவில் கடந்த பல ஆண்டுகளாக டிசம்பர் மாதத்தில் புயல் தாக்கியது இல்லை. சுமார் 130 ஆண்டுகளுக்கு பிறகு ஒடிசாவை டிசம்பர் மாதத்தில் புயல் தாக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

1891-ம் ஆண்டு முதல் ஒடிசாவை 100-க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் அந்த புயல்களில் ஒன்றுகூட டிசம்பர் மாதம் ஒடிசாவை தாக்கியது இல்லை. 

ஒடிசாவை வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் அதிகளவு புயல்கள் தாக்கி உள்ளன. வழக்கத்துக்கு மாறாக டிசம்பரில் புயல் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால் ஒடிசா மாநில கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Tags:    

Similar News