செய்திகள்
அஜித் பவார்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-10-26 06:52 GMT   |   Update On 2020-10-26 06:52 GMT
மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து தீவிரமாக பரவி வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு பொதுமக்கள் முதல், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், மத்திய மந்திரிகள், மாநில முதல் மந்திரிகள் என அனைவரும் இலக்காகி வருகின்றனர்.

அந்த வகையில், மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு (வயது 61) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இத்தகவலை அஜித் பவார் வெளியிட்டுள்ளார். தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும், டாக்டர்கள் அறிவுறுத்தியதால் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாகவும் பவார் கூறி உள்ளார்.

புனே, சோலாப்பூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு திரும்பியபின்னர் அஜித் பவாருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இரண்டாவது முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக, மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்மந்திரியும், பாஜக தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிசுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவரும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 
Tags:    

Similar News