செய்திகள்
காராமணிக்குப்பம் சந்தையில் மாடுகளுக்கான கயிறு விற்பனை நடந்த போது எடுத்த படம்.

களைக்கட்டியது பொங்கல் பண்டிகை - சந்தைகளில் பொருட்களை வாங்க குவிந்த மக்கள்

Published On 2020-01-14 17:47 GMT   |   Update On 2020-01-14 17:47 GMT
பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க சந்தைகளில் மக்கள் குவிந்ததால், பண்டிகை தற்போது களைகட்டி இருக்கிறது.
கடலூர்:

பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க சந்தைகளில் மக்கள் குவிந்ததால், பண்டிகை தற்போது களைகட்டி இருக்கிறது. கோலப்பொடி தொடங்கி மாடு கட்டும் கயிறுகள் வரைக்கும் அனைத்து பொருட்களையும் வாங்கி சென்றனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (புதன்கிழமை) உலகெங்கும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. கிராமங்களை பொறு த்தவரை தொடர்ந்து 3 நாட்கள் களைகட்டி இருக்கும். தை முதல் நாளில் தைப்பொங்கல், மறுநாள் மாட்டுப்பொங்கல், அதை தொடர்ந்து காணும் பொங்கல் என்று கொண்டாட்டங்கள் நிறைந்து காணப்படும்.

பொங்கல் என்றாலே தித்திக்கும் கரும்பு, சர்க்கரை பொங்கல் தான் நினைவுக்கு வரும். இதையொட்டி, பொங்கலிடுவதற்கான புதுப்பானை, பச்சரிசி, மஞ்சள் கொத்து, வெல்லம், மாட்டுப்பொங்கலுக்கு மாடுகளுக்கான கழுத்து மணி, வண்ண, வண்ண கயிறு போன்ற முக்கிய பொருட்களுக்காக கிராமத்து சந்தைகளில் எண்ணற்ற கடைகள் விரிக்கப்பட்டு, வியாபாரமும் படுஜோராக நடந்து வருகிறது.

அந்த வகையில், நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடக்கும் வாரச்சந்தை நேற்று நடந்தது. இதில் பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. நெல்லிக்குப்பத்தை சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் சந்தைக்கு வந்து, பொங்கலிடுவதற்கு தேவையான மண்பானைகள், கரும்பு, காய்கறிகள், மாடுகளுக்கு தேவையான வண்ண வண்ண கயிறுகளை வாங்கி சென்றனர். மேலும் பண்டிகை நாளில் வீட்டு வாசலை அலங்கரிக்கும் வண்ண கோலப்பொடிகளையும் பெண்கள் ஆர்வத்துடன் வாங்கியதை பார்க்க முடிந்தது. இதனால் சந்தை வழக்கத்தை விட மக்கள் கூட்டம் நிரம்பி களைக்கட்டி காணப்பட்டது.

இதேபோல் கடலூர் உழவர் சந்தையிலும் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக குவிந்து இருந்தன. கடலூர் உழவர் சந்தைக்கு நேற்று காலையில் இருந்தே கரும்பு, மஞ்சள்கொத்துகள் வரத்தொடங்கின. ஒரு கரும்பு ரூ.15 முதல் 20 வரைக்கும் ஜோடி கரும்பு ரூ.30 முதல் 40 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் மஞ்சள் கொத்து ரூ.10 முதல் ரூ.20 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தார் குறைந்த பட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.200 வரைக்கும், 12 முதல் 15 பழங்கள் எண்ணிக்கை கொண்ட ஒரு சீப் ரூ.20 முதல் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று கடலூர் உழவர் சந்தைக்கு தலா 5 டன் கரும்பு மற்றும் வாழைத்தார், 4 டன் மஞ்சள் கொத்துகள் வரத்து காணப்பட்டது. இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் 2 நாட்களுக்கு கரும்பு, வாழைத்தார் மற்றும் மஞ்சள் கொத்து ஆகியவற்றின் வரத்து அதிகரிக்கும் என உழவர் சந்தை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News