லைஃப்ஸ்டைல்
நாடிசுத்தி மூச்சு பயிற்சி

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் நாடிசுத்தி மூச்சு பயிற்சி

Published On 2020-02-05 03:28 GMT   |   Update On 2020-02-05 03:28 GMT
ஆஸ்துமாவிற்கு நிரந்தர தீர்வு யோகக் கலையில் மட்டுமே உள்ளது. இந்த வியாதி முழுக்கவும் நமது உடலில் இயங்கும் பிராணனை மையமாக வைத்து அமைந்துள்ளது.
ஆஸ்துமா மழைக்காலம், குளிர்ந்த காற்று வீசும் காலங்களில் இரவில் தான் அதிகமாக தாக்கும். குறிப்பாக அதிகாலை மூன்று மணி முதல் தொடங்கும். காரணம், நாம் உண்ணும் உணவிலிருந்து வெளிப்படும் சக்தி அதிகாலை மூன்று மணிக்கு நுரை யீரலுக்கு ஊடுருவுகிறது. அப்பொழுது பல வீனமடைந்துள்ள நுரையீரல் அச்சக்தியை தாங்க முடியாமல் திணறுகிறது. அதனால் நோயாளி படுக்கையை விட்டு எழுந்து மூச்சு விட முடியாமல் திணறுகிறார்.

ஆஸ்துமாவிற்கு நிரந்தர தீர்வு யோகக் கலையில் மட்டுமே உள்ளது. இந்த வியாதி முழுக்கவும் நமது உடலில் இயங்கும் பிராணனை மையமாக வைத்து அமைந்துள்ளது. மூச்சோட்டத்தை சரி செய்தால் இதிலிருந்து முழுமையான விடுதலை கிடைக்கும். எனவே நாடிசுத்தி என்ற மூச்சு பயிற்சியை எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.

நாடிசுத்தி செய்முறை: உங்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். சுகாசனத்தில், சாதாரணமாக அமர்ந்து கொள்ளலாம். ஆஸ்துமா வியாதி உள்ளவர்கள் ஒரு நாற்காலியில் ஒரு வெள்ளைத்துணி விரித்து அதில் அமர்ந்து கொள்ளலாம். முதுகெலும்பு நேராக வைத்து நாற்காலியின் பின்பிறம் முதுகு படும்படி அமர்ந்து கொள்ளலாம்.

உடல்நிலை ஓரளவு நலமாக உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளலாம். அமர்ந்தவுடன், கண் களை மூடவும். கைகளை சின்முத்திரையில் வைக்கவும்.

உங்களது மனதை தலை, கழுத்து, தோள்பட்டை , வலது கை, இடது கை, இதயம், வயிறு, வலது கால், இடது கால், தலை முதல் கால்வரை ஒவ்வொரு பகுதியிலும் நிறுத்தி அந்தப் பகுதியில் உள்ள எல்லா அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி ரிலக்ஸ் செய்யவும்.

பின் மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை இரு நாசி வழியாக வெளியிடவும். மூச்சை உள் இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை உள் வாங்குவதாக எண்ணவும். மூச்சை வெளியிடும் பொழுது நம் உள் உறுப்புக்களில் உள்ள டென்ஷன், அழுத் தம் வெளியேறுவதாக எண்ணவும். இதுபோல் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் செய்யவும். இப்பொழுது நமது உடல் வெளி தசைகள், உள் உறுப்புக்களில் உள்ள அழுத்தம், டென்ஷன் வெளியாகி இந்த உடல் நாடிசுத்தியின் முழுப்பலனை அடை வதற்கு தயாராகிவிட்டது.

முதல் பயிற்சி

இடது கை சின்முத்திரை (பெருவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்க்கவும். மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கியிருக்குவும்.) வலது கை பெருவிரலினால் வலது நாசியை அடைக்கவும். இடது நாசிவழியாக மிக மெதுவாக மூச்சை முடிந்த அளவு உள் இழுக்கவும். இடது நாசியிலேயே மெதுவாக மூச்சை வெளியிடவும். இதேபோல் பத்து முறைகள் செய்ய வேண்டும்.

இரண்டாவது பயிற்சி

வலது கை மோதிரவிரலால் இடது நாசி யை அடைக்கவும். வலது நாசிவழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும், வலது நாசியிலேயே மீண்டும் மெதுவாக மூச்சை வெளியிடவும். மீண்டும் வலது நாசியில் மூச்சை உள் இழுத்து உடன் வலது நாசியில் மூச்சை வெளியிடவும். இதேபோல் பத்து முறைகள் நிதானமாக செய்யவும்.

பயிற்சி மூன்று

இப்பொழுது வலதுகை பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக மூச்சை மெதுவாக உள் இழுத்து உடன் இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். இதேபோல் மீண்டும் இடது நாசியில் மூச்சை இழுத்து வலது நாசியில் மூச்சை வெளிவிடவும். இதேபோல் பத்து முறைகள் செய்யவும்.

பயிற்சி நான்கு

இப்பொழுது வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசி வழி யாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும் உடன் பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியில் மெதுவாக மூச்சை வெளிவிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும்.

பயிற்சி ஐந்து

மேற்குறிப்பிட்ட நான்கு பயிற்சிகளை நிதானமாக செய்தபின் கண்களை மூடி இயல்பாக இருநாசி வழியிலும் மூச்சு உள்ளே செல்வதையும், மூச்சு வெளிவருவதையும் கூர் ந்து கவனிக்கவும். மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் உங்கள் மூச்சில் மட்டும் கவனம் செலுத்தவும். பின் மெதுவாக கண்களைத் திறந்து கொள்ளவும்.

பயிற்சி ஆறு:- (ஜலந்திர பந்தம்)

இப்பொழுது இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். உடன் தலையை குனிந்து பத்து விநாடிகள் மூச்சை அடக்கியிருக்கவும். உடன் மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளிவிட்டு தலையை நிமிர்த்தவும். இதேபோல் மீண்டும் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து உடன் தலையைக் குனிந்து பத்து விநாடிகள் மூச்சடக்கியிருக்கவும். மெதுவாக மூச்சை வெளியிட்டு நிமிர்ந்து கொள்ளவும். இது மாதிரி பத்துத் தடவைகள் பயிற்சி செய்யவும். ஐந்து முறை பயிற்சி செய்து சற்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் ஐந்து முறை பயிற்சி செய்யலாம்.

உடலில் உள்ள நாடி நரம்புகள் சளியின் காரணமாக செயல்பாடு தடைபடுவது தான் ஆஸ்துமாவிற்கு மூலகாரணம். நாடிகளை சுத்தம் செய்யும் ஒரே பயிற்சி மேற்குறிப்பிட்ட எளிய நாடிசுத்தி பயிற்சி தான். இதனை நம்பிக்கையுடன் பயிற்சி செய்யுங்கள். உடலில் சளி தொந்தரவு நீங்கும். நாடி நரம்புகளில் இரத்த ஒட்டம் சிறப்பாக இயங்கும். நாடிகள் சுத்தமானால், மூச்சோட்டம் சிறப்பாக இயங்கும். 
Tags:    

Similar News