செய்திகள்
நாராயணசாமி

நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் விதிமுறையை சபாநாயகர் கடைபிடிக்கவில்லை- நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2021-02-23 11:04 GMT   |   Update On 2021-02-23 11:04 GMT
புதுவை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் விதிமுறையை சபாநாயகர் சிவக்கொழுந்து கடைபிடிக்கவில்லை என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதையடுத்து காங்கிரஸ்-தி.மு.க., சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் சபையில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து முதல்-அமைச்சர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதனால் புதுவை அரசு கவிழ்ந்தது. சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்தாமல் அரசு பெரும்பான்மையை இழந்தது என்று எப்படி சொல்லமுடியும் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்து சட்டப் பேரவையில் உரையாற்றினேன். அந்த நேரத்தில் அரசு கொறடா அனந்தராமன் ஜனாதிபதி தேர்தலில் நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உரிமையில்லை என்ற பிரச்சினையை எழுப்பினார். அதனை சபாநாயகர் ஏற்காத காரணத்தினால் நாங்கள் எங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கூறி வெளிநடப்பு செய்தோம்.

அதன் பிறகு நான் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் சரியான விதிமுறையை கடைபிடிக்கவில்லை. அந்த தீர்மானத்தை நான் முன்மொழிந்து பேசிய பிறகு அந்த தீர்மானத்தின் மீது வாக்கொடுப்பு நடத்த வேண்டும்.

நாங்கள் வெளிநடப்பு செய்தாலும் கூட முதல்- அமைச்சர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுகிறேன் என்று சபாநாயகர் அறிவிக்க வேண்டும். ஆளுங்கட்சியில் யாரும் இல்லாததால் எதிர்க் கட்சியின் எண்ணிக்கையை எண்ணி எவ்வளவு பேர் எதிர்த்து வாக்களிக்கிறார்கள் என்று பதிவு செய்த பிறகு தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்க வேண்டும்.

அதைவிட்டு விட்டு முதல்- அமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் தீர்ப்பு வழங்குகிறார். வாக்கெடுப்பு நடத்தாமல் எப்படி பெரும்பான்மையை இழந்துவிட்டது என்று சபாநாயகர் சொல்ல முடியும்.? இது ஒரு சட்டப் பிரச்னை. இதுசம்பந்தமாக சட்டவல்லுநர்களுடன் கலந்து பேசுவோம்.

இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
Tags:    

Similar News