ஆன்மிகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-02-18 04:22 GMT   |   Update On 2021-02-18 04:22 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாக்களில் மாசித்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த ஆண்டுக்கான மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து வருகிற 28-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகின்றன.

மாசித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடிப்பட்டம் ஊர்வலமாக ஒன்பது சந்திகளிலும் வலம் வந்து கோவிலை சேர்ந்தது.

அதனைதொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் காலை 5.20 மணிக்கு சந்தோஷ்குமார் பட்டர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரம் தர்ப்பை புல்லால் அலங்கரிக்கப்பட்டது. கொடி மர பீடத்துக்கு எண்ணெய், தைலம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், சந்தனம், விபூதி போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மேலும், பூஜையில் கும்பத்தில் வைக்கப்பட்டு இருந்த புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பட்டு ஆடைகளாலும், வண்ண மலர்களாலும் கொடிமர பீடம் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 6.35 மணிக்கு வேதமந்திரம் முழங்க, “அரோகரா” கோஷகத்துடன் சோடச தீபாராதனை நடந்தது. பின்னர் கட்டியம் கூறப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. நான்கு வகை வேதங்கள் பாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் விஷ்ணுசந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News