செய்திகள்

மே 19-ந் தேதி வேலூர் தேர்தலையும் நடத்த வேண்டும்- ஏ.சி.சண்முகம் பேட்டி

Published On 2019-04-18 13:02 GMT   |   Update On 2019-04-18 13:02 GMT
சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் மே 19-ந் தேதி வேலூர் தேர்தலையும் நடத்த வேண்டும் என்று ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார். #acshanmugam #admk #parliamentelection

வேலூர்:

வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. ஆனால் இன்று நடக்க இருந்த வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் மட்டும் ஓட்டுப்போட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இது அவமானம்தான். மக்கள் ஓட்டுப்போடாமல் போனது துரதிஷ்டவசமானது.

தேர்தல் நடத்துவது குறித்து எங்கள் வக்கீல் குழுவினருடன் ஆலோசனை நடத்தி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. தேர்தல் கமி‌ஷனுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள். வரும் மே மாதம் 19-ந் தேதி தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலுடன் நிறுத்தப்பட்ட இந்த பாராளுமன்ற தொகுதி தேர்தலையும் நடத்த வேண்டும்.

ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து அங்கேயும் இதுபோன்ற தீர்ப்பு வந்தால் தேவையில்லாமல் வருமான வரித்துறையினருடன் உரசல் ஏற்படும். வருமான வரித்துறை இந்த வழக்கை துரிதமாக முடிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் விரைவில் நடக்கும். தி.மு.க. வேட்பாளர் செய்த தவறால் இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் கமி‌ஷன் தன்னிச்சையாக முடிவு எடுக்ககூடியது. அவர்களின் முடிவுக்கு பிரதமர் மோடியை குறை கூறுவது தவறு. இந்த தேர்தலை ரத்து செய்தது ஒரு வகையில் தி.மு.க.வுக்கு சாதகமானதுதான்.

பெரிய தோல்வியில் இருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனவே தாமதம் செய்யாமல் தேர்தல் நடத்த வேண்டும். இல்லையென்றால் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று காலை ஆரணி நாடாளுமன்ற தொகுதி ஆரணி கொசப்பாளையத்தில் ஏ.சி.சண்முகம் ஓட்டு போட்டார். அப்போது நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர் பேச முடியாமல் கண்கலங்கினார். பின்னர் நிறுத்தபட்ட வேலூர் நாடாளுமன்ற தேர்தலை 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் மே 19-ந் தேதி நடத்த வேண்டும் என்றார். #acshanmugam #admk #parliamentelection

Tags:    

Similar News