ஆன்மிகம்
நடராஜர்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை ஆனித்திருமஞ்சன தரிசன விழா

Published On 2019-06-28 06:25 GMT   |   Update On 2019-06-28 06:25 GMT
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசனவிழா கொடியேற்றத்துடன் நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 5 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி ஆருத்ரா தரிசனமும், ஆனித்திருமஞ்சனமும் சிறப்பு வாய்ந்தவையாகும்.

ஏனெனில் மார்கழி, ஆனி மாதத்தில் நடைபெறும் விழாவில் மூலவராகிய சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியே உற்சவராக புறப்பாடாகி தேரில் வலம் வந்து, மகா அபிஷேகமும், தரிசன நிகழ்வும் நடைபெறும். இதை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

அந்த வகையில் இந்தாண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் விழா கொடியேற்றப்படுகிறது. இதைதொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது.

இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் தங்கம், வெள்ளி, பூத, ரி‌‌ஷப, யானை உள்ளிட்ட வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சியும் நடக்கிறது. அடுத்த மாதம்(ஜூலை) 3-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும், 6-ந் தேதி தங்க ரதத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி காலை நடைபெறுகிறது. பின்னர் இரவில் ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

சிகர நிகழ்ச்சியாக 8-ந்தேதி ஆனித்திருமஞ்சனத்தையொட்டி காலை 4 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலாவும் நடைபெற உள்ளது.

தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன விழா நடைபெறுகிறது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் மூன்று முறை முன்னும், பின்னும் நடனம் ஆடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.
Tags:    

Similar News