ஆன்மிகம்
வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

செங்கழுநீரம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

Published On 2020-11-28 06:44 GMT   |   Update On 2020-11-28 06:44 GMT
வீராம்பட்டினத்தில் உள்ள பிரசித்திபெற்ற செங்கழுநீரம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. மாட வீதிகள் வழியாக தேரை பக்தர்கள் இழுத்து வந்தனர்.
புதுவையை அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் நடைபெறும் திருவிழாவின்போது தேரோட்டத்துக்காக சுமார் 400 ஆண்டுகள் பழமையான தேர் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த தேர் பழுதாகி காணப்பட்டதால் புதிய தேர் செய்ய பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அரசு மற்றும் பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக தேர் செய்யும் பணி தொடங்கி நடந்து வந்தது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதற்காக நேற்று காலை 8.30 மணியளவில் அலங்கரித்து தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தி தேர் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் வடம்பிடித்து இழுத்து தேர் வெள்ளோட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். மாட வீதிகள் வழியாக தேரை பக்தர்கள் இழுத்து வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை அரசு செயலர் மகேஷ், அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், என்.ஆர்.காங்கிரஸ் தொகுதி தலைவர் பாஸ்கர், அ.தி.மு.க. பிரமுகர் அய்யப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த ஆடி மாத திருவிழாவின்போது கொரோனா தொற்றால் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்ள முடியாத பக்தர்கள் நேற்றைய தேர் வெள்ளோட்டத்தின் போது ஆர்வத்துடன் ஏராளமான அளவில் கலந்து கொண்டு செங்கழுநீரம்மனை தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேர் திருப்பணிக் குழுவினர், அறங்காவல் குழுவினர், வீராம்பட்டினம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

முன்னதாக ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பொதுமக்களுக்கு லட்டு மற்றும் தலா ஒரு கிலோ வீதம் சர்க்கரை வழங்கினார். அரசியல் கட்சிகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News