ஆன்மிகம்
இயேசு

நல்ல கனி தராத மரம்

Published On 2020-12-16 08:01 GMT   |   Update On 2020-12-16 08:01 GMT
அவர்கள் போலி இறைவாக்கினரிடமும், பணம் பிடுங்கும் சமயவாதிகளிடமும் மாட்டிக்கொண்டு தங்கள் துன்பங்கள் தீர்ந்துவிடாதா என்று ஏங்கினார்கள். அவர்களிடம் ‘போலிகள்’ குறித்த விழிப்புணர்வை இயேசு உருவாக்கினார்.
இயேசு எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்பித்தார், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார், எல்லா விதமான நோய்களையும் எல்லா விதமான உடல் பலவீனங்களையும் குணமாக்கினார். பெரும் திரளான மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது அவருடைய மனம் உருகியது. மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அதிகார வர்க்கத்தால் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள். அவர்கள் போலி இறைவாக்கினரிடமும், பணம் பிடுங்கும் சமயவாதிகளிடமும் மாட்டிக்கொண்டு தங்கள் துன்பங்கள் தீர்ந்துவிடாதா என்று ஏங்கினார்கள். அவர்களிடம் ‘போலிகள்’ குறித்த விழிப்புணர்வை இயேசு உருவாக்கினார்.

“போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். ஒவ்வொரு மரமும் அதனதன் கனியால் அறியப்படும். போலி இறைவாக்கினரை அவர்களின் செயல்களைக்கொண்டே அறிந்துகொள்வீர்கள். நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். மரம் அதன் கனியால் அறியப்படும். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியாது. அதைப் போல, செயல்களைக்கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும் என்று உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அதிகாரத் தொனியுடன் கற்பித்தார் இறைமகன்.

ஒரு முறை இயேசு வரி வசூலிக்கும் அலுவலகத்தில் மத்தேயு என்ற ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவரைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்று இயேசு கூறியதும் உடனே மத்தேயு எழுந்து அவரைப் பின்பற்றிப் போனார். பின்பு, மத்தேயுவின் வீட்டில் இயேசு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது வரி வசூலிப்பவர்கள், பாவிகள் எனப் பலரும் அங்கே வந்து இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். இதைப் பார்த்த சமய அதிகாரம் கொண்ட பரிசேயர்கள், இயேசுவின் சீடர்களைப் பார்த்து “உங்கள் போதகர் ஏன் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறார்?” என்று சத்தமாகக் கேட்டார்கள். அது அவருடைய காதில் விழுந்தபோது, “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை. அதனால், ‘பலியை அல்ல; இரக்கத்தைத்தான் நான் விரும்புகிறேன்’ என்று சொல்லப்பட்டதன் அர்த்தத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள். நீதிமான்களை அல்ல: பாவிகளைத்தான் நான் மீட்க வந்தேன்” என்று சொன்னார்.
Tags:    

Similar News