செய்திகள்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிகள் திறப்பு அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Published On 2021-08-12 07:17 GMT   |   Update On 2021-08-12 09:42 GMT
நூலகங்களின் தேவையை அறிந்து அதை சரிசெய்யும் நடவடிக்கைகளும், மேம்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செப்டம்பர் 1-ந்தேதி முதல் சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க பரிசீலிக்கப்படும் என்று முதல்- அமைச்சர் சொல்லி இருக்கிறார். அப்படி திறக்கப்படும் போது ஒரு வகுப்புக்கு 50 சதவீதம் என சுழற்சி முறையில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

உதாரணத்துக்கு ஒரு வகுப்பில் 40 பேர் இருந்தால் ஒருநாள் 20 பேரும், அடுத்த நாள் 20 பேரும் வருவார்கள். இதுதொடர்பான ஆலோசனை ஆரம்ப நிலையில் இருக்கிறது.


மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வரும்போது வழிகாட்டு நெறிமுறைகளை எப்படி செய்யலாம், பள்ளிக்கூடங்களை எப்படி தயார் நிலையில் வைக்க வேண்டும். அதற்காக என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்கிற கூட்டம் இன்று நடக்கிறது.

அந்த கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன். என்னென்ன பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற ஆலோசனை முடிந்த பிறகு பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்.

நீட் தேர்வை பொறுத்தவரை கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதி முதல் அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் இயற்பியல், தாவரவியல், வேதியியல் என ஒவ்வொரு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுக்கான பயிற்சி கடந்த ஜனவரி முதல் அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு சந்தேகம் இருந்தால் அதை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது ஒருபுறம் நடந்தாலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்.

தமிழகம் முழுவதும் சில மாவட்டங்களில் நூலகங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. இன்னும் சில மாவட்டங்களில் நூலகங்களுக்கு சொந்த கட்டிடம் இருந்தாலும் அதில் பழுது ஏற்பட்டுள்ளது. எனவே நூலகங்களுக்கு புதிய கட்டிடம் தேவைப்படுகிறதா? புத்தகங்கள் எந்த நிலையில் பாதுகாக்கப்படுகிறது என்ற அறிக்கைகளை கேட்டுள்ளோம்.

நூலகங்களின் தேவையை அறிந்து அதை சரிசெய்யும் நடவடிக்கைகளும், மேம்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News