செய்திகள்
பொல்லார்டு, நிக்கோலஸ் பூரன்

பொல்லார்டு எனக்கு மூத்த சகோதரர் போன்றவர்: நிக்கோலஸ் பூரன் சொல்கிறார்

Published On 2019-12-23 09:51 GMT   |   Update On 2019-12-23 09:51 GMT
எனது கிரிக்கெட் கேரியர் முடிந்து விடும் என்ற நிலையில், பொல்லார்டுதான் உதவி செய்தார் என்று நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன். தற்போது விக்கெட் கீப்பர் பணியில் ஈடுபடாமல் முழு நேர பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியானது.

அந்த சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பொல்லார்டு பூரனுக்கு அதரவாக இருந்தார். இதனால் தடைக்கான போட்டிகள் முடிந்த அடுத்த போட்டியிலேயே இந்தியாவுக்கு எதிரான தொடரில் களம் இறக்கப்பட்டார். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 29 ரன்களும், 47 பந்தில் 75 ரன்களும், 64 பந்தில் 89 ரன்களும் விளாசினார்.

இந்நிலையில் பொல்லார்டு இல்லை என்றால் தனது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கும் என்று நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து நிக்கோலஸ் பூரன் கூறுகையில் ‘‘பொல்லார்டு எனக்கு மூத்த சகோதரர் மாதிரி. அதேபோல் தந்தை போன்றவர். நான் கிரிக்கெட்டிற்கு திரும்பியதில் இருந்தே எனக்கு ஆதரவாக உள்ளார். அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதனால் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எங்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் பற்றி நன்றாக தெரியும். விளையாட்டிற்கு வெளியிலும் நாங்கள் சிறந்த நண்பர்கள். ஆகவே, பேட்டிங் செய்யும்போது எப்படி உற்சாகமாக விளையாட வேண்டும் என்பதை எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.
Tags:    

Similar News