செய்திகள்
சரத்பவார்

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி- காங்கிரசுக்கு சபாநாயகர் அந்தஸ்து

Published On 2019-11-28 09:32 GMT   |   Update On 2019-11-28 09:32 GMT
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் அமைய உள்ள புதிய அரசில், தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்பட உள்ளது.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி” என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியுள்ளன. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே இந்த கூட்டணி சார்பில் முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா இன்று மாலை மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது. மாலை 6.40 மணிக்கு உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 கட்சிகளும் தொண்டர்களை திரட்டுவதால் 3 முதல் 4 லட்சம் பேர் வரை சிவாஜி பூங்கா மைதானத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பதவி ஏற்பு விழாவை குறுகிய நேரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரேயுடன் இன்று 3 கட்சிகளையும் சேர்ந்த தலா 2 பேர் வீதம் 6 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3-ந்தேதிக்குள் சட்டசபையில் உத்தவ் தாக்கரே மெஜாரிட்டியை நிரூபித்து காட்ட உள்ளார். அதன் பிறகு மகாராஷ்டிர மந்திரிசபையை உத்தவ் தாக்கரே விரிவுபடுத்துவார்.

மொத்தம் உள்ள 288 எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் 43 பேர் மந்திரிகளாக பதவி ஏற்க முடியும். சிவசேனாவுக்கு 16, தேசியவாத காங்கிரசுக்கு 14, காங்கிரசுக்கு 13 என்ற எண்ணிக்கையில் மந்திரி பதவிகளை பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

சிவசேனா கட்சிக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளதால் தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி இரண்டும் தங்களுக்கு துணை முதல்-மந்திரி பதவி தர வேண்டும் என்று வலியுறுத்தின. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் துணை முதல்-மந்திரி பதவி என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து துணை முதல்-மந்திரி பதவியை கைப்பற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியின் ஜெயந்த் பட்டீல் அந்த போட்டியில் முன்னிலையில் உள்ளார்.

ஆனால் துணை முதல்-மந்திரி பதவியை அஜித் பவாருக்கு வழங்க வேண்டும் என்று சரத்பவாரிடம் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். அதை சரத்பவார் ஏற்பாரா? என்று தெரியவில்லை.



இன்று மாலை 4.30 மணிக்கு சரத்பவாரும், உத்தவ் தாக்கரேயும் சந்தித்து புதிய அமைச்சரவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது அஜித்பவாருக்கு மந்திரிசபையில் எத்தகைய பதவி கொடுப்பது என்பது பற்றி முடிவாகும்.

துணை முதல்-மந்திரி பதவியை விட்டுக் கொடுத்ததால் சபாநாயகர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் விட்டுக் கொடுத்துள்ளன. இதையடுத்து சபாநாயகர் ஆக காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கடும் போட்டி உருவாகி இருக்கிறது.

சட்டசபை காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப், புதிய மந்திரி சபையில் சக்தி வாய்ந்த இலாகா வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே மற்றொரு மூத்த தலைவரான கே.சி. பத்வி சபாநாயகராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

முக்கிய இலாகாக்களை பிரித்துக் கொள்வது தொடர்பாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உள்துறை, நிதி, பொதுப்பணித்துறை, மின்சாரம், ஊரக மேம்பாடு உள்பட சில இலாகாக்களை கைப்பற்ற 3 கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சிகள், வாரியங்கள் ஆகியவற்றை பிரித்துக் கொள்வது பற்றியும் 3 கட்சித் தலைவர்களும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இப்போது பிரித்துக் கொள்ளப்படும் இலாகாக்களை 5 ஆண்டுகளுக்கு மாற்றக்கூடாது என்று 3 கட்சிகளும் சம்மதித்துள்ளன.

இந்த நிலையில் 3 கட்சிகளில் இருந்தும் புதிய மந்திரிகளாக வாய்ப்பு இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவசேனா தலைவர்களில் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், ரவீந்திர வைக்கர், தீபக் கேசர்கர், உதய் சமந்த், தடா புஸ்சி, குலப்ராவ் பட்டீல், சஞ்சய் ராய் முல்கர், சுனீல்பிரபு ஆகியோர் மந்திரியாக பொறுப்பு ஏற்க வாய்ப்புள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஜெயந்த் பட்டீல், அஜித்பவார், திலீப் வால்சே பட்டீல், நவாப் மாலிக், சஜன் புஜ்பால், தனஞ்செய் முண்டே ஆகியோர் மந்திரிகளாவது உறுதியாகி உள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பாலாசாகேப், அசோக் சவான், வர்ஷா கெய்க்வாட், அமீன் பட்டீல், விஸ்வஜித் கடம், கே.சி. பத்வி, நிதின் ராவத் ஆகியோர் மந்திரிகள் ஆகிறார்கள்.

மந்திரி பதவி கிடைக்காதவர்களுக்கு வாரிய பதவிகளை பிரித்துக் கொடுக்க 3 கட்சி தலைவர்களும் ஒரு மனதாக முடிவு செய்துள்ளனர். எனவே மந்திரிசபை விஸ்தரிப்புக்கு பிறகு வாரிய தலைவர்கள் இடங்களைப் பிடிக்க 3 கட்சி தலைவர்களிடமும் கடும் போட்டி ஏற்படும்.
Tags:    

Similar News