செய்திகள்
சாலை மறியல்

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி நேர்காணல் ரத்து- 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

Published On 2021-02-27 10:11 GMT   |   Update On 2021-02-27 10:11 GMT
தேர்தல் அறிவிப்பு வெளியானதால் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை கேட்டதும் இளைஞர்கள், இளம்பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை:

கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள 49 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு இன்று டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நேர்காணல் நடைபெறும் அறிவிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு இருந்தது.

இதையடுத்து இன்று காலையில் 300-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடினர். இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானதால் நேர்காணல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை கேட்டதும் ஆவேசம் அடைந்த இளைஞர்கள், இளம்பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

இதுவரை கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 3 முறை நேர்காணலுக்கு அழைத்து, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு வயது வரம்பு முடிந்து போகும் நிலையில் இந்த வாய்ப்பை விட்டால் வேறு வேலை கிடைக்காத நிலை ஏற்படும்.

மேலும் மீண்டும் நேர்காணலுக்கு அழைக்கும் போது, தற்போது வந்த அனைத்து விண்ணப்பதாரர்களையும் அடுத்த முறை நேர்காணலுக்கும் அழைக்கவேண்டும். மாறாக வயது வரம்பை காரணம் காட்டி அடுத்த முறை விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு உங்கள் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதாகவும், தேர்தலுக்கு பின்னர் நேர்காணலுக்கு அழைக்கும்போது தற்போது அழைக்கப்பட்ட அனைவரும் அழைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News